ECONOMYMEDIA STATEMENT

ஐந்து வயதுச் சிறுவன் மரணம்- தாய், காதலனுக்கு எதிரான தடுப்புக் காவல் நீட்டிப்பு

கோலாலம்பூர், ஆக 30- ஐந்து வயதுச் சிறுவன் சித்தரவதைக்குள்ளாகி
மரணமடைந்தது தொடர்பில் கைது செய்யப்பட்ட அச்சிறுவனின் தாய்
மற்றும் அவரின் காதலனுக்கு எதிரான தடுப்புக் காவல் வரும் செப்டம்பர்
5ஆம் தேதி வரை எழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அச்சிறுவன் உயிரிழந்த தினமான ஆகஸ்டு 22ஆம் தேதியன்று அவ்விரு
சந்தேகப்பேர்வழிகளும் கைது செய்யப்பட்டு குற்றவியல் சட்டத்தின்
302வது பிரிவின் கீழ் விசராணைக்காக ஒரு வாரம் தடுத்து
வைக்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ.
அன்பழகன் கூறினார்.
அந்த தடுப்புக் காவல் அனுமதி நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில்
அந்த அனுமதி மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவ்விருவர்
மீதும் குற்றச்சாட்டைக் கொண்டு வருவது தொடர்பான உத்தரவு
தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் இன்று வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
தாய் மற்றும் அவரின் காதலனால் சித்தரவதை செய்யப்பட்டதாக
சந்தேகிக்கப்படும் ஐந்து வயதுச் சிறுவன் சுயநினைவற்ற நிலையில்
செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அன்றைய தினம்
பின்னிரவு 12.50 மணியளவில் உயிரிழந்ததாக அன்பழகன் கடந்த
சனிக்கிழமை கூறியிருந்தார்.
அச்சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து 44 வயதுடைய தாயும் 29
வயதுடைய அவரின் காதலனும் விசாரணைக்காக தடுத்து
வைக்கப்பட்டனர்.உயிர் பறிபோகும் அளவுக்கு அந்த சிறுவனைச் சித்தரவதை செய்ததை
அவ்விரு சந்தேகப்பேர்வழிகளும் ஒப்புக் கொண்டனர். அதோடு மட்டுமின்றி
அச்சிறுவன் லோரியில் மோதுண்டதாக போலீசில் பொய்யானப்
புகாரையும் கொடுத்திருந்தனர்.

Pengarang :