ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சவால்களை எதிர்கொள்ள ஒன்றுபடுவோம்- பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவோம்- மந்திரி புசார் வேண்டுகோள்

ஷா ஆலம், ஆக 31- மக்கள் ஒருமைப்பாட்டை அமல்படுத்தி ஒற்றுமையுடன் வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்தும் பட்சத்தில் பொருளாதாரச் சிக்கல்கள் உட்பட அனைத்து விதமான சவால்களையும் நாடு எதிர்கொள்ள முடியும்.

பொருளாதாரம் மற்றும் வட்டார முதலீட்டில் ஆதிக்கம் செலுத்துவதற்கு அனைத்து நாடுகளும் தற்போது போட்டியிட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பொருளாதார ஆதிக்கத்தை பெறுவதற்கும் முடிந்தால் நில ஆதிக்கத்தை பெறுவதற்கும் அண்டை நாடுகளும் வட்டார நாடுகளும் வாய்ப்புகளைத் தேடி அலைவதை நாம் காண்கிறோம்.

மக்கள் மத்தியில் நிலவும் ஒற்றுமை மட்டுமே நம்மை பலப்படுத்தும். மாநிலத் தேர்தல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் நாம் ஒன்றுபடுவதற்குரிய தருணம் வந்து விட்டது. காரணம் பெரிய சவால்கள் நமக்காக காத்திருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் 66வது தேசிய தினத்தை முன்னிட்டு நேற்றிரவு இங்குள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

நாடு தொடர்ந்து வலுவுடன் இருப்பதற்கு ஏதுவாக பொறுப்பற்ற தரப்பினர் பரப்பி வரும் பொய்யான மற்றும் களங்கத்தை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை பொது மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அவதூறான செய்திகள் எத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஹாங் துவா மற்றும் ஹாங் ஜெபாட் போன்ற வரலாற்று நாயகர்களின் கதைகள் மூலம் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

அவதூறு காரணமாக நாடும் மாநிலமும் அழிந்து தரைமட்டம் ஆகிவிடும். ஆகவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு அவதூறுகளை முறியடிப்போம் என அவர் சொன்னார்.


Pengarang :