ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

மலையேறும் போது வழி தவறினர்- மூவரைத் தேடும் பணி தீவிரம்

ஜெர்த்தே, செப் 2- ஜாபி, கூனோங் தெபுவில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கீழே இறங்கும் போது வழி தவறினர். 

மலையேறுவதற்காக 23 முதல் 33 வயது வரையிலான அம்மூவரும் கடந்த வியாழக்கிமை கோல திரங்கானுவிலுள்ள தங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டதாக பெசுட் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. அஸ்ரோல் அனுவார் நோர் கூறினார்.

அம்மூவரும் கூனோங் தெபு மலையின் காட்டுப்பகுதியில் வழி தவறியது தொடர்பில் அவர்களில் ஒருவரின் தாயாரிடமிருந்து நேற்று பிற்பகல் 12.50 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார்.

கூனோங் தெபு மலையில் தாங்கள் வழிதவறி விட்டதாக தன் மகன் தொலைபேசி வழி தம்மிடம் தெரிவித்ததாக அம்மாது தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து  தேடி மீட்கும் நடவடிக்கை நேற்று மாலை 3.30 மணியளவில் தொடங்கப்பட்டது. எனினும், மழை மற்றும் இருள் சூழ்ந்த காரணத்தால் நேற்று மாலை 6.00 மணியளவில் தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டது என அவர் மேலும் சொன்னார்.

போலீஸ், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசிய பொது தற்காப்பு பிரிவு ஆகிய தரப்பினரை உள்ளடக்கிய இந்த தேடுதல் நடவடிக்கை இன்று காலை 8.00 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.


Pengarang :