ECONOMYMEDIA STATEMENT

டெங்கிலில் உள்ள ஈயக் கப்பல் அருங்காட்சியகமாக மாற்றும் பணி அடுத்தாண்டில் முற்றுப்பெறும்

ஷா ஆலம், செப் 4- டெங்கில் நகரில் உள்ள மிகப்பெரிய ஈயக்கப்லை
ஈயச்சுரங்க அருங்காட்சியகமாக மாற்றுவதற்கான பணிகள் விரைந்து
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அருங்காட்சியகம் அடுத்தாண்டில்
பொது மக்களுக்குத் திறக்கப்படும் என்று கலாசாரத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தின் புதிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக இந்த
அருங்காட்சியம் விளங்கவுள்ளதாகக் கூறிய அவர், கோலாலம்பூர்
அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது இந்த
அருங்காட்சியத்திற்கு கிடைத்த கூடுதல் அனுகூலமாகும் என்று
தெரிவித்தார்.
இந்த கப்பலில் ஏற்பட்டுள்ள பழுதுகளைச் சரி செய்யும் பணி தற்போது
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகின் ஒரே மற்றும் மிகப்பெரிய
ஈயக்கப்பலாக இது விளங்கி வருகிறது. மாநிலத்தில் சுற்றுலாத் துறையை
மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளில்
இதுவும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தை நனவாக்குவதற்கு சுற்றுலா, கலை மற்றும் கலாசார
அமைச்சிடம் தாங்கள் மானியம் கோரியுள்ளதோடு அனைத்துத்
தரப்பினரின் ஒத்துழைப்பையும் நாடியுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
உலகின் மிகப்பெரிய ஈயக்கப்பலான இதனை மாநில அரசு சிப்பாங்
நகராண்மைக் கழகத்தின் வாயிலாக கடந்தாண்டு ஜூன் மாதம்
கையகப்படுத்தியது.
டெங்கில் நகரில் அமைந்துள்ள சுமார் 6,000 டன் எடை கொண்ட இந்த
ஈயக்கப்பலை சீரமைக்கும் பணி அடுத்தாண்டில் முற்றுப் பெற்றவுடன்
இந்நாட்டில் ஈய்த் தொழிலின் வரலாற்றைச் சித்தரிக்கும் பிரசித்தி பெற்ற
அருங்காட்சியகமாக இது விளங்கும்.

Pengarang :