SELANGOR

சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளிக்குப் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் வருகை

ஷா ஆலம், செப் 13- இங்குள்ள சுங்கை
ரெங்கம் தமிழ்ப்பள்ளிக்கு பத்து தீகா
சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷிட்
ஹருண் நேற்று வருகை புரிந்தார்.

காலை 9.45 மணியளவில் பள்ளிக்கு வருகை
புரிந்த அவரை பள்ளியின் தலைமையாசிரியர்
திருமதி எஸ்.விஜயகுமாரி, பள்ளி மேலாளர்
வாரியத் தலைவர் எம். சுகுமாறன், பெற்றோர்
ஆசிரியர் சங்கத் தலைவர் கே. சத்திய
மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.

கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றப் பின்னர் டேனியல்
வருகை புரியும் முதல் பள்ளியாகச் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின்
அடைவு நிலை மற்றும் எதிர்காலத் திட்டங்கள்
குறித்து சட்டமன்ற உறுப்பினருக்குப் பள்ளி
சார்பில் விளக்கமளிக்கப்பட்டதாக மேலாளர்
வாரியத் தலைவர் க.சுகுமாறன் கூறினார்.

இப்பள்ளி மிகவும் சிறப்பான முறையில்
செயல்படுவதற்கு பள்ளி நிர்வாகம், மேலாளர்
வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர்
சங்கத்தின் கூட்டு முயற்சியே காரணம் என
அவரிடம் எடுத்துரைத்தோம். அதே சமயம்,
பள்ளியின் வளரச்சிக்காக மாநில அரசு
வழங்கி வரும் நிதியுதவிக்கும் நன்றி தெரிவித்துக கொண்டோம் என்றார் அவர்.

இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டுத்
துறையில் சிறந்து விளங்கிய போதிலும் திடல்
போதிய அடிப்படை வசதிகள் இன்றி இருக்கும்
விவகாரத்தை தாங்கள் சட்டமன்ற
உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு
வந்ததாக அவர் தெரிவித்தார்.

திடல் உள்பட பள்ளியில் அடிப்படை
வசதிகளை மேம்படுத்துவதில் சட்டமன்ற
உறுப்பினர் என்ற முறையில்
தம்மால் இயன்ற உதவிகளை வழங்குவதாக
அவர் வாக்குறுதியளித்துள்ளதாகவும்
சுகுமாறன் குறிப்பிட்டார்.

இந்த ஆக்ககரமான சந்திப்பின் வாயிலாக
எதிர் காலத்தில் மாநில அரசுடன் இணைந்து
பள்ளியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை
அமல்படுத்த முடியும் என தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :