ECONOMYMEDIA STATEMENTNATIONAL

புத்ராஜெயா சாலை விபத்தில் சம்பந்தப்பட்ட லோரி நிறுவனத்திற்கு காரணம் கோரும் கடிதம்

கோலாலம்பூர், செப் 22- புத்ராஜெயாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த கோர விபத்தில் சம்பந்தப்பட்ட டிரெய்லர் லோரி நிறுவனத்திடமிருந்து விபரங்களைப் பெறுவதற்காக காரணம் கோரும் கடிதத்தை தரை பொது போக்குவரத்து நிறுவனம் (அபாட்) அனுப்பவுள்ளது.

லைசென்ஸ் விதிமுறைகளை அந்நிறுவனம் மீறியிருப்பது விசாரணையில் தெரிய வந்தால் 2010ஆம் ஆண்டு தரைப் பொது போக்குவரத்துச் சட்டத்தின் 62வது பிரிவின் கீழ் அந்நிறுவனத்தின் உரிமம் முடக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்று அபாட் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.

பொது போக்குவரத்து வாகனங்கள் விபத்தில் சிக்கும் அளவிற்கு அவற்றை அபாயகரமான முறையில் செலுத்தும் விவகாரத்தில் நாங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்க மாட்டோம். இந்த கோர விபத்து குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம் என அந்த நிறுவனம் தெரிவித்தது.

பதினான்கு வாகனங்களை உட்படுத்திய அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட டிரெய்லர் லோரி ‘சி‘ வகை உரிமத்தைக் கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்ததாகவும் அது குறிப்பிட்டது.

பொதுமக்களின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் தீவிர கவனம் செலுத்துகிறோம். அந்நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட துறைகளின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் எனவும் அந்நிறுவனம் கூறியது.

சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த அந்த டிரெய்லர் லோரி மோதியதில் இருவர் உயிரிழந்ததோடு மேலும் எழுவர் காயமடைந்தனர்.


Pengarang :