EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

அந்நிய வாகனமோட்டிகளுக்கு எதிரான சோதனையில் 280 சம்மன்கள் வெளியீடு, 49 பேர் கைது

கோலாலம்பூர், செப் 22 – அம்பாங்கில் உள்ள ஜாலான் தாசேக் தம்பாஹானில்  கூட்டரசு பிரதேச சாலைப் போக்குவரத்துத் துறை நேற்று மேற்கொண்ட அந்நிய வாகன மோட்டிகளுக்கு எதிரான “ஒப் பெவா” சோதனை நடவடிக்கையில் 280 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.

ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு 114 சம்மன்களும், காப்புறுதி இல்லாத  வாகனங்களுக்கு 32 சம்மன்களும் வழங்கப்பட்ட வேளையில்  64 மோட்டார் சைக்கிள்கள், இரண்டு கார்கள் மற்றும் இரண்டு  லோரிகள் உள்ளிட்ட 68 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்று கூட்டரசு பிரதேச சாலை போக்குவரத்து இலாகாவின் துணை இயக்குநர் எரிக் ஜூசியாங் கூறினார் .

செல்லத்தக்க பயணப் பத்திரங்களைக் கொண்டிராது மற்றும் அனுமதிக்கப் பட்டதைவிட கூடுதல் நாட்கள் நாட்டில் தங்கியிருந்தது ஆகிய காரணங்களுக்காக வங்காளதேசம், மியான்மர், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 49 வெளிநாட்டினர்  கைது செய்யப் பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும்  அவர்கள் மேல் நடவடிக்கைக்காக கோலாலம்பூரில் உள்ள மலேசிய குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் எரிக் தெரிவித்தார்.

வெளிநாட்டினர் செலுத்திய குற்றத்தின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட  வாகனங்களில் பெரும்பாலானவை  உள்ளூர்வாசிகளுக்கு சொந்தமானவை என்பது சோதனையில் கண்டறியப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 64 (1)வது பிரிவின் கீழ் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்பதால் உள்ளூர் வாசிகள் தங்கள் வாகனங்களை வெளிநாட்டினருக்கு வாடகைக்கு விடவோ அல்லது ஓட்ட  அனுமதிக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்துகிறேன் என்று அவர் கூறினார்.


Pengarang :