ECONOMYMEDIA STATEMENT

உள்ளூர் வணிகர்களின் 2,000 உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்த மைடின் பெர்ஹாட் உதவி

சுபாங் ஜெயா, செப் 30- உள்ளூர் தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் 250 உள்நாட்டு தயாரிப்பாளர்களின் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருள்களை சந்தைப் படுத்துவதில் மைடின் ஹோல்டிஸ் பெர்ஹாட் நிறுவனம் உதவியுள்ளது.

உள்நாட்டு வணிகர்கள் தங்கள்  உற்பத்திப் பொருள்களைப் பிரபலப்படுத்துவதிலும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதிலும் எதிர்நோக்கும் சவால்களை 66 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட உள்நாட்டு நிறுவனம் என்ற முறையில் தாங்கள் நன்கு உணர்ந்துள்ளதாக மைடின் ஹோல்டிங்ஸ் நிர்வாக இயக்குநர் டத்தோ அமீர் அலி கூறினார்.

கடந்தாண்டு உள்நாட்டுத் தயாரிப்பு பொருள்களின் விற்பனை மதிப்பு 270 கோடி வெள்ளியை எட்டியது. மலேசியப் பொருள்களை வாங்குங்கள் போன்ற இயக்கங்களின் வழி உள்நாட்டுப் பொருள்கள் மீதான ஆர்வம் நாட்டு மக்களிடயே அதிகரித்துள்ளது என்று அவர் சொன்னார்.

இதன் அடிப்படையில் நாங்கள் உள்நாட்டு தொழில்முனைவோருக்கு வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதோடு அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்குகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு நடைபெற்ற “உள்நாட்டுப் பொருள்களை வாங்குவதில் பெருமை கொள்வோம்“ என்ற இயக்கத்தின் தொடக்க விழாவில் கலந்து  கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மைடின் யு.எஸ்.ஜே. பேரங்காடியில் நடைபெற்ற இந்த நிகழ்வை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் வர்த்தக மற்றும் விநியோகத் துறையின் மூத்த இயக்குநர் டத்தோ ரோஹாய்சி பகாரி  தொடக்கி வைத்தார்.


Pengarang :