ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஆடவர் கடத்தப்பட்டச் சம்பவம் தொடர்பில் ஐவர் போலீஸ்காரர்கள் உள்பட ஆறு பேர் கைது

கோலாலம்பூர், செப் 30- இங்குள்ள டேசா பெட்டாலிங்கில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து  வேலையில்லா நபரை கடந்த செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றது தொடர்பில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் உட்பட ஆறு  பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஐந்து காவல்துறை உறுப்பினர்களும் அடங்கும் என்றும் 27 முதல் 42 வயது வரையிலான அவர்கள் அனைவரும் சம்பவம் நிகழ்ந்த மறுநாள் செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஸாம் ஹலிம் ஜமாலுடின் கூறினார்.

தாம் கடத்தப்பட்டது தொடர்பில் அன்றைய தினம் மாலை 5.48 மணி அளவில் பாதிக்கப்பட்ட அந்த 26 வயது நபரிடமிருந்து காவல்துறை புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார்.

அன்றைய தினம் மாலை 3.45 மணியளவில்  டேசா பெட்டாலிங்கிலுள்ள உணவகம் ஒன்றிலிருந்து கும்பல் ஒன்று தன்னைக் கடத்திச் சென்றதாக வேலையில்லாத அந்த நபர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்ததாக ஸாம் ஹலிம் தெரிவித்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட செராஸ் மாவட்ட குற்றப்புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் அடங்கிய குழு, அந்த ஐந்து காவல் துறை உறுப்பினர்களையும் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தனர் என்றார் அவர்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 365, 342 மற்றும் 323 பிரிவுகளின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் நடத்தப்பட்டு வரும் விசாரணை முற்றுப் பெற்றவுடன் மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றார் அவர்.


Pengarang :