SELANGOR

செந்தோசா தொகுதியில் துப்புரவு இயக்கம் – 300 பேர் பங்கேற்பு – 1,500 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டன

கிள்ளான், அக் 9- கிள்ளான் நகர ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல்
(ஜே.சி.ஐ.) அமைப்பின் ஆதரவுடன் இங்குள்ள புக்கிட் திங்கி 2 அடுக்குமாடி
குடியிருப்பு பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கூட்டு துப்புரவு
இயக்கத்தில் 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

குடியிருப்புப் பகுதிகள் சுத்தமாகவும் டிங்கி நோய் பரவலிலிருந்து
விடுபட்டதாகவும் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலான இந்த துப்புரவு
இயக்கம் காலை 8.00 மணி தொடங்கி மதியம் 12.00 மணி வரை
நடைபெற்றதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்
கூறினார்.

இங்கு 1,600 குடியிருப்புகளை உள்ளடக்கிய 12 புளோக்குகள் உள்ளன.
சுகாதாரமற்ற சுற்றுப்புறச் சூழல் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி டிங்கி
காய்ச்சல் சம்பவங்கள் பதிவானதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் பண்டார் கிளாங் ஜே.சி.ஐ. அமைப்பின்
ஒத்துழைப்புடன் செந்தோசா தொகுதி சேவை மையம் கூட்டு துப்புரவு
இயக்கத்திற்கு இங்கு ஏற்பாடு செய்தது என்று அவர் சொன்னார்.

முன்னதாக அவர், பசுமை மற்றும் தூய்மையை இலக்காகக் கொண்ட
செந்தோசா தொகுதியின் இரண்டாவது முன்னெடுப்பை தொடக்கி
வைத்தார். மாநகர் அந்தஸ்தைப் பெறும் கிள்ளான் நகராண்மைக்
கழகத்தின் இலக்கிற்கேற்ப செந்தோசா தொகுதியிலுள்ள குடியிருப்புகள்
எப்போதும் தூய்மையுடன் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த
இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பங்சாபுரி பண்டார் புக்கிட் திங்கி 2 குடியிருப்பு பகுதியில் துப்புரவு
பணிகளை மேற்கொள்வதில் ஒத்துழைப்பு நல்கிய வட்டார
குடியிருப்பாளர்களுக்கும் ஜே.சி.ஐ.க்கும் தாம் நன்றி தெரிவித்துக்
கொள்வதாக குணராஜ் குறிப்பிட்டார்.


Pengarang :