SELANGOR

நீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு காரணமாக நாளை நீர் விநியோகத் தடை- லோரிகள் மூலம் நீர் விநியோகம்

ஷா ஆலம், அக் 9- சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு மையத்தில் பராமரிப்பு
மற்றும் பழுதுபார்ப்பு பணிகளை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம்
நாளை 10ஆம் தேதி மேற்கொள்ளவுள்ளது.

சுமார் 51 மணி நேரத்திற்கு நீடிக்கும் இந்த பழுதுபார்ப்பு பணி, ஐம்பது
ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த வால்வுகளை மாற்றுவதை
பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்பணியை மேற்கொள்வதன்
மூலம் எதிர்காலத்தில் எதிர்பாராத பழுதுகளை ஏற்படுவதை தவிர்க்க
இயலும் என நம்பப்படுகிறது.

இத்தகைய பழுதுபார்ப்பு பணிகள் வழக்கமாக ஒவ்வோராண்டும்
நடத்தப்படும் என்றும் எனினும், நீர் விநியோகத் தடை ஏற்படாத வகையில்
அப்பணிகள் ஒருங்கிணைக்கப்படு வந்ததாகவும் ஆயர் சிலாங்கூர்
நிறுவனத்தின் இடைக்கால தலைமைச் செயல்முறை அதிகாரி இஞ்சினியர்
அபாஸ் அப்துல்லா கூறினார்.

எனினும், இம்முறை அடையாளம் காணப்பட்ட சாதனங்களை மாற்ற
வேண்டியுள்ளதால் நீர் விநியோகத்தை முழுமையாக நிறுத்த வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

பெட்டாலிங், கோலாலம்பூர், உலு லங்காட் ஆகிய பகுதிகளில்
ஏற்படக்கூடிய நீர் விநியோகத் தடையினால் பொது மக்களுக்கு ஏற்படும்
பாதிப்பை கருத்தில் கொண்டு 75 டேங்கர் லோரிகளை தாங்கள் ஏற்பாடு
செய்துள்ளதாக அவர் சொன்னார்.

இந்த நீர் விநியோகத் தடையை கருத்தில் கொண்டு பொது மக்கள்
போதுமான அளவு நீரை சேகரித்து வைத்துக் கொள்ளும்படி அவர் கேட்டுக்
கொண்டார்.

இந்த பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக வரும் 10ஆம் தேதி காலை 9.00
மணி முதல் நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று ஆயர் சிலாங்கூர்
நிறுவனம் முன்னதாக கூறியிருந்தது.

நீர் விநியோகத் தடை தொடர்பான விபரங்களை பொது மக்கள் 15300 என்ற
எண்களில் அல்லது waterupdates.airselangor.com என்ற அகப்பக்கம் வாயிலாக
அறிந்து கொள்ளலாம்.


Pengarang :