NATIONAL

முக்கியப் பதவிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்- சி.ஐ.டி. இயக்குநர் வலியுறுத்து

கோலாலம்பூர், அக் 12- குற்றப்புலனாய்வுத் துறையில் (சி.ஐ.டி.) உள்ள முக்கிய அதிகாரிகளும் உறுப்பினர்கள் தங்கள் சொத்து விபரங்களை தெரிவிக்க கோரும் சுற்றறிக்கை இரு வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு போலீஸ் துறையை மட்டும் உள்ளடக்கியுள்ளதால் அவர்கள் தங்கள் சொத்து விபரங்களை அறிவிக்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் கிடையாது என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது ஜைன் கூறினார்.

தேசியப் போலீஸ் படைத் தலைவர்  மற்றும் துணை தலைவரின் உத்தரவின் பேரில் சி.ஐ.டி. துறையை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

உளவு மற்றும் நடவடிக்கைப் பிரிவு, ஒழுங்கீன, சூதாட்ட மற்றும் குண்டர் கும்பல் பிரிவு (டி7) மற்றும் மாவட்ட போலீஸ் தலைமையகங்களைச் சேர்ந்த சி.ஐ.டி. பிரிவுத் தலைவர் பதவி ஆகியவை முக்கியப் பதவிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

எனது உரை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுவதற்கு முன்னர் அதாவது இரு வாரங்களுக்கு முன்பு அனைத்து சி.ஐ.டி. அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு இதன் தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு விட்டது என்று அவர் தெரிவித்தார்.

சொத்துகளை அறிவிக்கும் நடவடிக்கை வெளிப்படையதானதாகவும் விரிவான வகையிலும் இருக்க வேண்டும் என்று அவர் நேற்று இங்குள்ள புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஒருவருக்கு வாங்கும் சக்தி இருந்தால் எவ்வாறு அந்த சக்தி கிடைத்தது என்று அவர் விளக்க வேண்டும். நிதி ஆற்றல் உள்ள யாரும் எதையும் வாங்குவதை நான் தடுக்கவில்லை. சட்டப்பூர்வமாக நிதி வளத்தைப் பெற்றிருந்தால் அது குறித்து கேள்வியெழுப்புவதற்கு நான் யார்? என அவர் வினவினார்.


Pengarang :