ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2024 பட்ஜெட்- வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு 1,180 கோடி வெள்ளி ஒதுக்கீடு

கோலாலம்பூர், அக் 13- நாடு முழுவதும் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்ள 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 1,180 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிலாங்கூரில் மேற்கொள்ளப்படும் 2 ஆம் கட்ட சுங்கை லங்காட் வெள்ளத் தணிப்புத் திட்டமும் அதில் அடங்கும்.

மக்களைப் பாதுகாப்பதற்கும் உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் பேரழிவு ஏற்படுவதைத் தடுப்பதற்கும் ஏதுவாக வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் துரித கதியில் மேற்கொள்ளப் படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது தெரிவித்தார்.

பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு 2,200 கோடி வெள்ளி பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வேளையில் இந்த 1,180 கோடி வெள்ளி ஒதுக்கீடு அதனுடன் இணைக்கப்படுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த 1,180 கோடி வெள்ளி நிதியில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த 33 வௌளத் தடுப்புத் திட்டங்கள் வரும் ஆண்டுகளில் அமல்படுத்தப்படும் என அவர் சொன்னார்.

அவற்றில் 510 கோடி வெள்ளி மதிப்பிலான 24 திட்டங்களுக்கான பணி ஏற்பு கடிதங்கள் இவ்வாண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வெளியிடப்படும். எஞ்சியப் பணிகளுக்கான கடிதங்கள் வரும் 2024 முதல் காலாண்டில் வழங்கப்படும் என்றார் அவர்.

அந்த 33 வெள்ளத் தடுப்புத் திட்டங்களில் சுங்கை லங்காட் இரண்டாம் கட்ட வெள்ளத் தடுப்புத் திட்டம், பகாங் மாநிலத்தின் சுங்கை பகாங், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கோல பிலாவிலுள் சுங்கை ஜெலாய் ஆற்றுப் படுகைத் திட்டங்களும் அடங்கும் என அவர் தெரிவித்தார்.


Pengarang :