ANTARABANGSAMEDIA STATEMENT

மேற்கத்திய நாடுகள் பதிலடிக் கொடுத்தாலும் பாலஸ்தீனத்திற்காக மலேசியா தொடர்ந்து போராடும்

ரியாத், அக் 22- பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதில் மலேசியா கொண்டுள்ள ஆணித்தரமான நிலைப்பாடு சில மேற்கத்திய நாடுகள் எதிர்வினையாற்றுவதற்குரிய சாத்தியத்தை ஏற்படுத்தும் என்றாலும் பாலஸ்தீன மக்களுக்காக மலேசியா தொடர்ந்து அனைத்துலக அரங்கில் போராடி வரும்.

இஸ்ரேலின் அடக்குமுறை காரணமாக பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருவதால் மனிதாபிமான அடிப்படையில் இத்தகைய முடிவினை எடுப்பதைத் தவிர மலேசியாவுக்கு வேறு வழி தெரியவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எனக்கும் தெரியும். இருந்தாலும் சிறு குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிர்களைப் பறிக்கும் பாதகச் செயல்கள் நிகழ்வதால் இவ்விவகாரத்தில் எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

பதிலடி நடவடிக்கைள் குறித்து நான் கவலைப்படவில்லை. காரணம், அனைத்து நாடுகளும் (ஆசியான் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றம்) இவ்விவகாரத்தில் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டுள்ளன. காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் கருத்திணக்கம் காணப்படுகிறது என்று அவர் சொன்னார்.

சவூதி அரேபியாவுக்கான தனது இரண்டு நாள் பயணத்தின் இறுதி நாளில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாலஸ்தீன விவகாரத்தை ஆசியான்- வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் முதலாவது கூட்டத்தில் தாம் முன்வைத்த அதே வேளையில் ஆசியான் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்களுடனும் தனிப்பட்ட முறையில் இது குறித்து விவாதித்ததாக அவர் சொன்னார்.

இந்த விவகாரத்தில் நாம் தனித்து நிற்கவிரும்பவில்லை. தனது நிலைப்பாட்டை புத்ராஜெயா வெளிப்படுத்தி விட்டது. பாலஸ்தீன மக்களின் நலனுக்காக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.


Pengarang :