ECONOMYMEDIA STATEMENTPBT

அடிப்படை வசதி மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் முன்னுரிமை- பலாக்கோங்  உறுப்பினர் நம்பிக்கை

ஷா ஆலம், அக் 28- அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சிகளுக்கு மாநில அரசின் 2024 வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தாம் நம்புவதாக பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இந்நோக்கத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கீட்டை இந்த வரவு செலவுத் திட்டத்தில் தாங்கள் எதிர்பார்ப்பதாக வின்னி ஓங் சுன் வேய் கூறினார்.

தமது தொகுதியில் உள்ள பல மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அவற்றை சீரமைக்க கூடுதல் நிதி தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

அடிப்படை வசதிகளுக்காக ஏற்கனவே வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வசதிகளை முறையாக பராமரிப்பதற்கு ஏதுவாக மாநில அரசு கூடுதல் நிதியை ஒதுக்கினால் சிறப்பாக இருக்கும் என  அவர் சொன்னார்.

மாணவர்கள் குறிப்பாக தொழில் திறன் கல்வியை மேற்கொள்வோர் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவக் கூடிய திட்டங்கள் மீது இந்த 2024 வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தின் 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வரும் நவம்பர் 10ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கிறார்.

இவ்வாண்டில் 245 கோடி வெள்ளி மதிப்பிலான வரவு செலவுத் திட்டத்தை மாநில அரசு தாக்கல் செய்திருந்தது. அதில் 125 கோடி வெள்ளி நிர்வாகச் செலவினங்களுக்கும் 120 கோடி வெள்ளி மேம்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்டது.


Pengarang :