ECONOMYMEDIA STATEMENT

தடுப்பணை அடிக்கடி உடையும் விவகாரம்- சம்பந்தப்பட்ட தரப்புடன் மாநில அரசு சந்திப்பு

சிப்பாங், நவ 9 டெங்கில் நகரின் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் தடுப்பணை அடிக்கடி உடையும் சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண மாநில அரசு  நாளை தொடர்புடைய துறைகளைச் சந்திக்கவுள்ளது.

கடந்த 2021ல் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு தடுப்பணை அமைப்பதற்கான பொருள் மாற்றப்பட்ட போதிலும்  அதே சம்பவம் குறிப்பாக கம்போங் செம்பராய் மற்றும் கம்போங் ஸ்ரீ தஞ்சோங் ஆகிய இடங்களில் மீண்டும்  நிகழ்ந்து வருகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த சிக்கலைச் சமாளிக்க நாங்கள் உடனடி தீர்வைக்காண வேண்டும். மேலும் சக்தி வாய்ந்த தடுப்பணையை உருவாக்க விரும்புகிறோம்.

சாத்தியம் உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கடந்த மாதம் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட நிலையில் என்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பதைக் காண பார்க்க விரும்புகிறோம் என்று அவர் கூறினார்

சைபர் ஜெயாவிலிருந்து கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் கிவா சமிக்ஞை விளக்கு சந்திப்பில் உள்ள பாதையை ஆய்வு செய்த பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்

முன்னதாக அவர், டெங்கில் தேசிய இடைநிலைப்பள்ளி மற்றும் டத்தோ அகமது ரசாலி பொது மண்டபத்தின் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சென்று கண்டார்.


Pengarang :