ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் 99 விழுக்காட்டு  கோழி வியாபாரிகள் விலையை முறையாகக் கடைபிடிக்கின்றனர்

சுபாங் ஜெயா, நவ 9- கோழி விலையை சந்தையின் தேவைக்கேற்ப நிர்ணயிக்கும் நடைமுறை கடந்த புதன் கிழமை அமல்படுத்தப்பட்டது முதல் சிலாங்கூரில் உள்ள 99 விழுக்காட்டு கோழி வியாபாரிகள் அந்த உணவு மூலப் பொருளின் விலையை உயர்த்தவில்லை.

கோழி விலை தொடர்பில்  தாங்கள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ புகாரையும் பெறவில்லை என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமது ஜுஹாய்ரி மாட் ரெடே கூறினார்.

கடந்த ஒன்பது நாட்களாக நாங்கள் மேற்கொண்ட கண்காணிப்பில் 99 விழுக்காட்டு வியாபாரிகள் விலையை முறையாக கடைபிடிக்கின்றனர். அவர்கள் கிலோ வெ.9.40 விலையை விட குறைவாகவே கோழியை விற்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

ஓரிரு இடங்களில் மட்டுமே கூடுதல் விலையில் கோழி விற்கப்படுகிறது. கோழி விலை தொடர்பில் பயனீட்டாளர்களிடமிருந்து இதுவரை எந்த புகாரும் வராதது எனக் உண்மையில் வியப்பைத் தருகிறது என்றார் அவர்.

தீபாவளியை முன்னிட்டு அமல்படுத்தப்பட்டுள்ள விலை உச்சவரம்பு திட்டத்தின் அமலாக்கத்தை இங்குள்ள மைடின் பேரங்காடியில் இன்று பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, கோழி விலையை சந்தையின் தேவைக்கேற்ப நிர்ணயிக்கும் நடைமுறையின் அமலாக்கத்தை தாம் வரவேற்பதாக கூறிய மைடின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ அமிர் அலி மைடின், இதரப் பொருள்களுக்கும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை பொறுப்பற்றத் தரப்பினர் துஷ்பிரயோகம் செய்ய முடியும். ஆனால் சந்தையின் தேவைக்கேற்ற விலை நிர்ணயம் சம்பந்தப்பட்ட பொருளின் விநியோகத்தை சார்ந்தே அமையும் என்றார் அவர்.


Pengarang :