ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தீபாவளியை முன்னிட்டு பெருநாள் விலை உச்சவரம்பு பட்டியலில் எட்டு பொருட்கள்

சுபாங் ஜெயா, நவ 8- தீபாவளியை முன்னிட்டு பெருநாள் கால விலை உச்சவரம்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள எட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறித்து மாநில அரசு மனநிறைவு கொண்டுள்ளது.

இந்த விலை உச்சவரம்பு திட்டத்தில் நிர்ணயிக்கப் பட்டதை விட தேங்காய், தேங்காய் துருவல், தக்காளி போன்ற பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்படுவதாக பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.

இன்று இந்த விலை உச்சவரம்பு திட்ட அமலாக்கத்தின்  முதல் நாளாகும். பொருட்களின் விலையை நேரில் கண்டறிவதற்காக இங்குள்ள மைடின் பேரங்காடிக்கு நாங்கள் நேரில் வருகை புரிந்தோம் என அவர் சொன்னார்.

இங்கு பொருட்களின் விலை குறைவாக உள்ளது. நாம் நிர்ணயித்ததை விட குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கின்றன. செலவை மிச்சப்படுத்த பயனீட்டாளர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இங்கு வாங்கலாம் என்றார் அவர்.

 இந்த நிகழ்வில் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் தலைமைச் செயலாளர் முகமது ஜூஹாய்ரி மாட் ராடே மற்றும் மைடின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ அமீர் அலி மைடின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தேங்காய், தேங்காய் துருவல், தக்காளி தவிர்த்து வெங்காயம், சிறிய வெங்காயம், சிவப்பு மிளகாய், இறக்குமதி செய்யப்பட்ட செம்மறியாட்டு இறைச்சி, ஆஸ்திரேலிய பருப்பு ஆகியவையும் விலை உச்சவரம்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்த பெருநாள் கால விலை உச்சவரம்பு திட்டம் இன்று தொடங்கி ஏழு நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின இடைக்கால அமைச்சர் அர்ஸான் முகமது அலி முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :