EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் அனைத்துலக புத்தக விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது- 255 கண்காட்சியாளர்கள் பங்கேற்பு

ஷா ஆலம், நவ 29- சிலாங்கூர் அனைத்துலக புத்தகக் கண்காட்சி 2023 வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இங்குள்ள ஷா ஆலம் மாநகர் மன்ற மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 255 பதிப்பகத்தினர் 354 கண்காட்சிக் கூடங்களில் தங்கள் புத்தகங்களை காட்சிக்கு வைக்கவுள்ளனர்.

அந்த கண்காட்சிக் கூடங்களில் 20 இந்தோனேசியா, கொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், நேப்பாளம், ஆஸ்திரேலியா துருக்கி மற்றும் அஸர்பைஜான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பதிப்பகத்தாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளைக் கொண்ட புத்தகங்கள் கவர்ச்சிகமான கழிவு விலையில் விற்கப்படுகின்றன. இது தவிர ஒவ்வொரு நாளும் இந்த கண்காட்சியில் பங்கேற்கும் ஒன்பது பேருக்கு 500 வெள்ளி ரொக்கப் பரிசுகளும் காத்திருக்கின்றன.

கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 16 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சிலாங்கூர் புத்தக விழாவுக்கு கிடைத்து வரும் ஆதரவைக் கருத்தில் கொண்டு மாநில அரசு கடந்தாண்டு தொடங்கி அனைத்துலக நிலையில் இந்த புத்தக விழாவை நடத்தத் தொடங்கியது.

தொடக்கத்தில் பி.கே.என்.எஸ். காம்ப்ளெக்சில் நடைபெற்று வந்த இந்த கண்காட்சி சுமார் 50 லட்சம் வருகையாளர்களை ஈர்த்ததைத் தொடர்ந்து எம்.பி.எஸ்.ஏ. மாநாட்டு மையத்திற்கு  மாற்றப்பட்டது.


Pengarang :