ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

பத்து தீகா தொகுதியில் வெள்ள அபாயம் உள்ள மூன்று இடங்கள் மீது தீவிர கவனம்

ஷா ஆலம், நவ. 29 – பத்து தீகா தொகுதியில்  வெள்ள அபாயம் உள்ளவை என அடையாளம் காணப்பட்ட மூன்று பகுதிகளில் வெள்ளச் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

பாடாங் ஜாவா, கம்போங் கெபுன் பூங்கா மற்றும் செக்சன் 24 ஆகிய மூன்று பகுதிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக பத்து தீகா சட்டமன்ற   உறுப்பினர்  டேனியல் அல்-ரஷிட் ஹருண் கூறினார்.

பத்து தீகாவில் தொகுதியில்  ஒன்பது இடங்கள் வெள்ள அபாயம் உள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் பாடாங் ஜாவா, கம்போங் கெபுன் பூங்கா மற்றும் செக்சன் 24 ஆகியவையே மிகவும் ஆபத்து நிறைந்த பகுதிகளாக கருதப்படுகின்றன என்றார் அவர்.

உதாரணமாக, பாடாங் ஜாவாவில், நீர் சேகரிப்புக் குளங்கள் மற்றும் நீர் இறைப்பு  பம்ப் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த உள்கட்டமைப்புகள் அதிக மழை பெய்யும் போது வெள்ளத்தை தடுப்பதில் துணை புரிகின்றன என அவர் குறிப்பிட்டார்.

கம்போங் கெபுன் பூங்கா  மற்றும் செக்சன் 24இல் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை திட்டமிட்டபடி முடிக்கப்படுவதை உறுதிசெய்ய நான் அதன் மேம்பாட்டை கண்காணித்து வருகிறேன் என்று சொன்னார்.

இங்குள்ள ஜே.கே.ஆர். மைதானத்தில்   2023 ஆம் ஆண்டு மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு போட்டியைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வெள்ளத்தை எதிர்கொள்ளும் பொருட்டு 100 பேர் கொண்ட தன்னார்வலர் குழுவை தொகுதி நிலையில் தாங்கள் தொடக்கியுள்ளதாகக் கூறிய அவர்,  பேரிடர் ஏற்படும் படசத்தில் களத்தில் இறங்க அக்குழு தயார் நிலையில் உள்ளது என்றார்.

நாடு இப்போது வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர் கொண்டுள்ளது. இது நவம்பர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :