ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இ-ஹெய்லிங் கார் ஓட்டுநரிடம் கொள்ளையிட முயன்றதாக 13 வயதுச் சிறுவன் மீது குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி, டிச 3- இ-ஹெய்லிங் எனும் மின் அழைப்பு வாடகைக் கார் ஓட்டுநரிடம் கொள்ளையிட முயன்றதாக 13 வயதுச் சிறுவன் மீது இங்குள்ள மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. 

எனினும், மாஜிஸ்திரேட் கைராத்துல் முன்னிலையில் தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை அச்சிறுவன் மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த மாதம் 27ஆம் தேதி மாலை 6.00 மணியளவில் இங்குள்ள ஜாலான் தாமான் கிளாடியில் லீ ஆங் ஹி (வயது 65) என்ற அந்த ஓட்டுநரிடம் கொள்ளையிட முயன்றதாக அச்சிறுவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 393வது  பிரிவின் கீழ் அந்த பதின்ம வயதுச் சிறுவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அச்சிறுவனை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 2,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட் வழக்கறிஞர் நியமனம் மற்றும் ஆவண ஒப்படைப்பு பணிகளுக்காக இந்த வழக்கை வரும் ஜனவரி 17ஆம் தேதிக்கு  ஒத்தி வைத்தார்.

இ-ஹெய்லிங் வாடகை காரில் பயணிக்கும் போது அந்த சிறுவன் அதன் ஓட்டுரை கத்தியால் குத்த முயன்றதை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடங்களில் பகிரப்பட்டது.

எனினும், அந்த ஓட்டுநர் அச்சிறுவனின் கையை கடித்ததோடு கத்தியையும் பறித்துக் கொண்டதால் அச்சிறுவன் காரிலிருந்து இறங்கி தப்பியோடினான்.

இச்சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் இரவு 8.00 மணியளவில் சம்பந்தப்பட்ட காரோட்டி போலீசில் புகார் செய்த தைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்தில் அச்சிறுவன் கைது செய்யப்பட்டான்.


Pengarang :