ANTARABANGSA

காஸாவில் சுகாதார நிலை குறித்து விவாதிக்க அவசரக் கூட்டம்- உலக சுகாதார நிறுவனம் நடத்துகிறது

ஜெனிவா, டிச 5 – காஸா மற்றும் மேற்குக் கரையில் காணப்படும் சுகாதார நிலைமைகள் குறித்து விவாதிக்க உலக சுகாதார நிறுவனம் சிறப்பு நிர்வாகக் குழுக் கூட்டத்தை  நடத்தும்.

இந்த சிறப்புக் கூட்டம் இம்மாதம் 10ஆம் தேதி நடத்தப்படும் என ஐ.நா.வின் உலகளாவிய சுகாதார அமைப்பின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீனிய தூதர் இப்ராஹிம் கிரைஸி கூறினார்.

உலக சுகாதார நிறுவன சிறப்புக்  குழுவின் 14 உறுப்பினர்களிடமிருந்து கோரிக்கையைப் பெற்ற பிறகு அதன் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்த அமர்வைக் கூட்டுகிறார் என்று உலக சுகாதார நிறுவனத்தின்  ஆவணம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் காசா மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அதேசமயம் மேற்குக் கரையில் சுகாதாரத் துறை மீதான தாக்குதல்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் இப்ராஹிம் கிரைஷி கூறினார்.

நாங்கள் உலக சுகாதார நிறுவனத்திற்கு  அதிகாரம் வழங்க விரும்புகிறோம்.   மருத்துவத் துறையை குறி வைக்க வேண்டாம் என்று இஸ்ரேலிய தரப்புக்கு கோரிக்கை விடுப்பதோடு புதிய மருத்துவப் பொருட்களை அனுப்ப அனுமதிக்கவும் கோருகிறோம் என்று அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம்  கூறினார்.  34 உறுப்பினர்களைக் கொண்ட குழு மதிப்பாய்வு செய்வதற்கு ஏதுவாக ஒரு பிரேரணையை தனது அரசதந்திர பணிக்குழு உருவாக்குகிறது என்றும் அவர் சொன்னார்.

குண்டு வீச்சுத் தாக்குதல் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக காஸாவிலுள்ள மருத்துவமனைகளில் ஒரு பகுதி மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன. தொடர்ந்து செயல்படும் மருத்துவமனைகளும் புதிதாக காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால்   அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹமாஸ் அமைப்பு பொது மக்களை கேடயங்களாகப் பயன்படுத்துவதோடு மருத்துவமனைகள் மற்றும் கட்டிடங்களை ஆணை மையங்களாகவும் ஆயுதங்களை மறைத்து வைக்கும் இடங்களாகவும்  பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.


Pengarang :