ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உயிர்த்திரள் துகள்களை எரிசக்தியாக பயன்படுத்துவதன் மூலம் 700 கோடி வெள்ளியைச் சேமிக்க முடியும்

புத்ராஜெயா டிச 7- பயோமாஸ் பேலெட் எனப்படும் உயிர்த்திரள் துகள்களை தேசிய எரிசக்தி ஆதாரமாக பயன்படுத்துவதன் மூலம் வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் 700 கோடி வெள்ளி வரை சேமிக்க முடியும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடிலா யூசுப் கூறினார்.

இயற்கை கழிவுகள் மூலம் உருவாக்கப்படும் உயிர்த்திரள் துகள்களை பயன்படுத்துவதன் வாயிலாக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை நாம் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருள் அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.

இது ஒரு சாத்தியக்கூறாக விளங்குகிறது. நாம் ஏராளமான துகள்கள் உருவாக்க முடியும் என்பதோடு அதனை பசுமை எரிசக்தியாகவும் பயன்படுத்த இயலும். இதன் மூலம் நிலக்கரிக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என இன்று இங்கு 2023ஆம் ஆண்டு தேசிய பயோமாஸ் மாநாட்டை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இயற்கைக் கழிவுகளைப் பயன்படுத்தி எரிசக்தியை உருவாக்குவதற்கு போதுமான வளங்கள் நம்மிடம் உள்ளதா என்பதுதான் தற்போது விவாதிக்கப்படும் விவகாரமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது வன வேளாண்மைத் திட்டத்தை அமைச்சு அமல்படுத்தி வருகிறது. ஐந்து ஆண்டுகளில் வளரக்கூடிய மரங்களை நாங்கள் நடவு செய்கிறோம். அவ்வாறு நடப்படும் மூங்கில் உள்ளிட்ட மரங்களை நிலக்கரி உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்துவோம் என்றார் அவர்.

இந்த நிகழ்வில் 2023-2030 தேசிய பயோமாஸ் செயல் திட்டமும் தொடங்கப்பட்டது. பயோமாஸ் துறைக்கு முக்கியப் பங்கினை ஆற்றும் தோட்டத் தொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு, வனம் மற்றும்  மீன்பிடித் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Pengarang :