ANTARABANGSAECONOMY

வேலை வாய்ப்பு மோசடி- நூற்றுக்கணக்கானோர் வெளிநாடுகளில் பரிதவிப்பு

கோலாலம்பூர், டிச.7- கடந்த நவம்பர் மாதம் வரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிக் கும்பல்களால் பாதிக்கப்பட்ட மொத்தம் 158 பேர் வெளிநாடுகளில் இன்னும் சிக்கித் தவிக்கின்றனர் என்று மேலவையில் தெரிவிக்கப்பட்டது.

வேலை வாய்ப்பு மோசடியில்  பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட  மொத்தம் 428 பேரில் இவர்கள் ஒரு பகுதியினராவர் என்று  துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சம்சுல் அனுவார் நசாரா கூறினார்.

கடந்த நவம்பர் 20 ஆம் தேதி வரை,  வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலின் பிடியில்  சிக்கியிருந்த  270 உள்நாட்டினரை அரச மலேசிய போலீஸ் படை காப்பாற்றியுள்ளது என்று அவர் சொன்னார்.

போலீஸ் தரவுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிவரங்களியன்படி, மியான்மார், கம்போடியா, லாவோஸ்  உள்ளிட்ட நாடுகளிலிருந்து மொத்தம் 325 போலீஸ் அறிக்கைகள் பெறப்பட்டன என்று அவர் இன்று மேலவையில் கேள்வி பதில் நேரத்தின் போது கூறினார்.

வெளிநாட்டில் கட்டாய வேலைக்காக  ஆட்களை கடத்தும் நோக்கிலான இணைய மோசடி வழக்குகளைக் கையாள்வதில் அமைச்சு எடுத்துள்ள விரிவான நடவடிக்கைகள் குறித்து டத்தோ தியோ எங் டீ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு மோசடி கும்பல்களை சமாளித்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக  ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சம்சுல் அனுவார் சொன்னார்.


Pengarang :