EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

வெ.20  லட்சம் செலவில் தாமான் மெலாவாத்தி  தமிழ்ப்பள்ளியில்  இணைக்கட்டட கட்டுமான பணி ஜனவரியில் ஆரம்பம்!

புத்ரா ஜெயா, டிச 9-  நாட்டில் மிகச் சிறந்த தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக கோலாலம்பூர் தாமான் மெலாவத்தி தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.  தற்போது 250 மாணவர்கள் பயில்கின்றனர். இதில் 8 மலாய் மாணவர்களும் அடங்குவர்.

அடுத்த ஆண்டு முதலாம் வகுப்பில் பயில இதுவரை 37 மாணவர்கள் பதிந்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று பள்ளி வாரியத் தலைவர் முனைவர் டாக்டர் மகாகணபதி தெரிவித்தார்.

இருபது லட்சம் வெள்ளி செலவில் இணைக் கட்டடம் கட்டும் பணிகள் தயார் நிலையில் உள்ளன.  இணைக் கட்டடம் கட்டி முடிக்கப் பட்டால் மாணவர்கள் எண்ணிக்கை 450 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

இப்போது பள்ளி வாரியத்திடம் 15 லட்சம் வெள்ளி உள்ளது. மீதம் 5 லட்சம் வெள்ளியை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தரும்படி மனிதவள அமைச்சர் சிவக்குமாரை அவர் கேட்டுக் கொண்டார்.

மனிதவள அமைச்சில் இன்று நடைபெற்ற முக்கிய சந்திப்பில் தாமான் மெலாவத்தி தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் உட்பட பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

வரும் ஜனவரி மாதம் தைப் பொங்கலுக்கு பிறகு இணைக் கட்டடத்திற்கு பூமி பூஜை விழா நடைபெறவுள்ளது.  மனிதவள அமைச்சர் சிவக்குமார் தலைமையில் இந்த பூமி பூஜை விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மகா கணபதி தெரிவித்தார்.

பூமி பூஜை விழாவில் கலந்து கொள்வதோடு இணைக் கட்டிடம் கட்டும் பணி வெற்றிகரமாக முடிவடைய முழு ஆதரவு வழங்குவேன் என்று அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.


Pengarang :