ANTARABANGSAECONOMY

ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பாலஸ்தீன தூதர் வருத்தம்

வாஷிங்டன், டிச 9-  காஸாவில் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கான நகல் தீர்மானத்தை நிறைவேற்றத் தவறியதற்காக ஐநா பாதுகாப்பு மன்றத்தை ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் அல் மன்சூர் வெள்ளிக்கிழமை கடுமையாக சாடினார்.

கிட்டத்தட்ட 100 ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஏற்பாட்டு ஆதரவிலான இந்த நகல்  தீர்மானத்தை அமெரிக்கா  தனது ரத்து  (வீட்டோ) அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தது.

இந்த தீர்மானம் ஐநா பாதுகாப்பு மன்றத்தின் 13 உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெற்றது. இருப்பினும் இங்கிலாந்து  நடுநிலையாக இருக்க முடிவு செய்தது.

இந்த தோல்வியை “வருந்தத்தக்கது” மற்றும் “பேரழிவு” என்று மனசூர்  வர்ணித்தார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த மன்றம் தனது ஆணையை வெளிப்படையாகச் செயல்படுத்த அனுமதிப்பதற்கு ஏதுவாக  அட்டூழியங்கள் நிறுத்தப்பட வேண்டும். ஆனால்,  போர்க் குற்றவாளிகள் தங்கள் குற்றங்களைச் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இதை எப்படி நியாயப்படுத்த முடியும்? ஒரு பிரதிநிதி  ஒட்டு மொத்த மக்களையும் கொல்ல எப்படி அனுமதிக்க முடியும்? அவர் கேள்வியெழுப்பினார்.

போர்நிறுத்தத்திற்கான தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய  மன்சூர்,  ஒவ்வொரு நாளும் அதிகமான உயிர்கள் பறிக்கப்படுகின்றன.  கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நவீன வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்றார்.

காஸா அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி அக்டோபர் 7 முதல் காஸாவில் 17,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் சிறார்கள் ஆவர். மேலும் இப்போரில்  46,000 பேர் காயமடைந்துள்ளதோடு சுமார் 1.8 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.


Pengarang :