ECONOMYMEDIA STATEMENTPBT

கோலாலம்பூரில் அந்நிய நாட்டினருக்கு எதிராக ஒருங்கிணைந்த அதிரடிச் சோதனை- 1,101 பேர் கைது

கோலாலம்பூர், டிச 22- தலைநகர், ஜாலான் சீலாங்கில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அமலாக்கத் துறையினர் உள்ளடங்கிய மாபெரும் சோதனை நடவடிக்கையில் குடிநுழைவுத்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு குற்றங்களுக்கு 1,101 பேர் கைது செய்யப்பட்டனர்.

காலை 11.00 மணி தொடங்கி மாலை 3.00 மணி வரை நீடித்த இந்த சோதனை நடவடிக்கையில் பல்வேறு அமலாக்கத் துறைகளைச் சேர்ந்த மொத்தம் 1,138 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கு கொண்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையில் பொது நடவடிக்கை படையின் மத்திய பட்டாளம், மத்திய சேம படை, மலேசிய சுங்கத் துறை, குடிநுழைவுத் துறை மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஆகியவற்றின் அமலாக்கப் பிரிவுகள் பங்கு கொண்டதாக அவர் சொன்னார்.

ஜாலான் சீலாங் மற்றும் கோத்தா ராயா வட்டாரத்தில் நிகழ்ந்து வரும் குறிப்பாக, அந்நிய நாட்டினர் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதோடு மட்டுமின்றி, அப்பகுதியில் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தடுத்து நிறுத்தும் நோக்கிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. கோலாலம்பூர் சட்டவிரோத அந்நிய நாட்டினரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இத்தகைய சோதனை நடவடிக்கைகளை தாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரப்போவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த சோதனயின் போது 104,530 வெள்ளி மதிப்புள்ள 100 கார்ட்டன் சிகரெட்டுகள், 80 கார்ட்டன் மதுபானங்கள் மற்றும் சுகாதார அமைச்சின் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட மருந்துகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார் அவர்


Pengarang :