ECONOMYMEDIA STATEMENT

இல்லாத முதலீட்டுத் திட்டத்தை நம்பி காப்புறுதி முகவர்  வெ.333,600  இழந்தார்

ஈப்போ, டிச 22 – இல்லாத இணைய முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்த காப்புறுதி  முகவர் ஒருவர் தனது சேமிப்புத் கொகையான  333,600 வெள்ளியை  இழந்தார்.

இங்குள்ள தாமான் பாரியைச் சேர்ந்த 46 வயது நபருக்கு “ஈவா” என்ற பெண்ணுடன் முகநூல் வாயிலாக  கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி நட்பு ஏற்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பஸ்ரி கூறினார்.

வாட்ஸ்அப் குழு ஒன்றின் நடத்துநர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட  அப்பெண், பாதிக்கப்பட்ட நபரை  ஏமாற்றி ‘பெயின் ஆன்லைன்’ என்ற  திட்டத்தில்  முதலீடு செய்ய வைத்ததாக அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட  அந்த ஆடவர் கடந்த அக்டோபர் 19 மற்றும் டிசம்பர் 12 ஆம் தேதிக்கும் இடையே  ஐந்து வங்கிக் கணக்குகளில் 333,600  வெள்ளித் தொகையை 12 பரிவர்த்தனைகள் மூலம் முதலீடு செய்ததாக  நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

முதலீட்டு லாபத்தைத் திரும்பப் பெறுவதற்கு 57,400 வெள்ளியை கமிஷன் தொகையாகச் செலுத்தும்படி ஈவா  கேட்ட பிறகு தாம் ஏமாற்றப் பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்தார் என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட கடந்த டிசம்பர் 19ஆம் தேதியன்று காவல்துறையில் புகார் அளித்ததாகக் கூறிய முகமட் யூஸ்ரி, இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார்.

இல்லாத முதலீட்டு திட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தேசிய மோசடி பதில் மையத்தை (NSRC) 997 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மோசடி தொடர்பான குற்றங்கள் குறித்து தகவலறிய விரும்புவோர்  வணிக குற்றப் புலனாய்வுத் துறைக்கு 013-211 1222 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாட்ஸ்ஆப் வழி செய்தி அனுப்பலாம்.


Pengarang :