ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போலி விருது விற்பனை மோசடியில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண எம்.ஏ.சி.சி. முயற்சி

புத்ராஜெயா, டிச 22- இம்மாத தொடக்கத்தில் முறியடிக்கப்பட்ட கூட்டரசு விருதுகளை போலியாக விற்பனை செய்யும் கும்பலிடம் ஏமாந்தவர்களை அடையாளம் காணும்  முயற்சியில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அரசு சாரா அமைப்பு ஒன்றில் உயர் பதவியை வகித்து வரும் ஆடவரால் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஏமாற்றப் பட்டுள்ளதாக நம்பப்படுகிறது என்று வட்டாரம் ஒன்று கூறியது.

அந்த நபரிடம் எம்.ஏ.சி.சி. அண்மையில் விசாரணை மேற்கொண்டது. எனினும், இந்த விசாரணைக்கு உதவ மேலும் அதிகமான சாட்சிகள் தேவைப்படுகின்றனர் என அது தெரிவித்தது.

இதனிடையே, இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த எம்.ஏ.சி.சி.யின் விசாரணைப் பிரிவு மூத்த இயக்குநர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹஷிம், விருது மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட எழுவரை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களில் ஐவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். விசாரணை முழுமை பெறுவதற்கு அவர்களின் உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது என்றார் அவர்.

டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட கூட்டரசு அரசின் உயரிய விருதுகளை 20 லட்சம் வெள்ளி விலையில் விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும். அரசு சாரா அமைப்பின் தலைவர் மற்றும் பெண்மணி  உள்பட அறுவரை எம்.ஏ.சி.சி. இம்மாத தொடக்கத்தில் கைது செய்தது


Pengarang :