ANTARABANGSAMEDIA STATEMENT

காஸா மீதான வாக்களிப்பு ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் மீண்டும் ஒத்தி வைப்பு

வாஷிங்டன்/நியுயார்க், டிச 22- காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பான  நகல் தீர்மானம் மீதான வாக்களிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பாதுகாப்பு  மன்றம் இன்று நான்காவது முறையாக ஒத்தி  வைத்தது.

ஐக்கிய அரசு சிற்றரசினால் தயாரிக்கப்பட்ட அந்த நகல் தீர்மானம் மீது வாக்களிப்பதற்கு 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு மன்றம் நாளை மறுபடியும் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது.

காஸாவில் போரினால் பாதிக்கப்பட்ட சிவிலியன்களுக்கு பாதுகாப்பான மற்றும் தடையற்ற மனிதாபிமான உதவிகள் வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என் அந்த தீர்மானம் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வீட்டோ எனப்படும் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தாமலிருப்பதை உறுதி செய்ய இவ்வாரம் முழுவதும் நடத்தப்பட்ட இரகசிய கூட்டத்தில் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க பிரதிநிதி லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட், இந்த நகல் தீர்மானம் மீது வாக்களிப்பதற்கு பாதுகாப்பு மன்றம் தயாராக உள்ளதாகக் கூறினார்.

கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் காஸா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இடைவிடாத தாக்குதல்களில் பெண்கள், சிறார்கள் உள்பட சுமார் 20,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 52,000 பெர் காயமடைந்துள்ளனர்.

உயிருடற் சேதங்கள் தவிர்த்து வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் மோசமாக சேதமடைந்துள்ளன மேலும் அப்பகுதியில் கடுமையான உணவு, நீர் மற்றும் மருந்து பற்றாக்குறையும் நிலவுகிறது.


Pengarang :