ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

தாமான் வாவாசான் நிலச்சரிவு பகுதியில் தடுப்புகளை அமைக்கும் பணி 40 விழுக்காடு பூர்த்தி

பூச்சோங், டிச 23- நிலச்சரிவு ஏற்பட்ட தாமான் வாவாசான் பகுதியில் மண்ணை ஸ்திரப்படுத்துவதற்கு ஏதுவாக மேற்கொள்ளப்பட்டு வரும் இரும்புத் தூண்களைப் பதிக்கும் பணி இதுவரை 40.26 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது. 

அப்பகுதியில் மண் நகர்வு ஏற்பட்டு அதனால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கிலான இப்பணி திட்டமிட்டபடி சீராக நடைபெற்று வருவதாக சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் டத்தோ முகமது பவுஸி முகமது யாத்திம் கூறினார்.

தொடர் மண் சரிவுச் சம்பவங்கள் நிகழாதிருப்பதை உறுதி செய்வதற்கு உடனடியாகவும் அவசரமாகவும் மேற்கொள்ள வேண்டிய பணி இதுவாகும். வரும் டிசம்பர் 24ஆம் தேதிக்குள் (ஞாயிற்றுக்கிழமை) சரிந்த மலைச்சாரல் பகுதியை சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

நிலச்சரிவின் காரணமாக மண்ணில் புதையுண்ட நான்கு கார்களை மாநகர் மன்றம் வெற்றிகரமாக மீட்டுள்ளது என்று நேற்று மாநகர் மன்றத்தின் மாதாந்திரக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

நிலச்சரிவுக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக கனிமவள மற்றும் புவிஅறிவியல் துறையின் அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக கூறிய அவர்,  அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பாதிக்கப்பட்ட வீடுகளின் குடியிருப்பாளர்கள் மீண்டும் வீடு திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்பதோடு அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் இன்னும் தங்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

தாமான் வாவாசானில் இம்மாதம் 16ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் ஒன்பது வரிசை வீடுகள் பாதிக்கப்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வீடுகளில் குடியிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.


Pengarang :