MEDIA STATEMENTNATIONALSUKANKINI

பாய்மரப் படகுப் போட்டி- கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் முயற்சிக்கு விளையாட்டாளர்கள் பாராட்டு

கோல லங்காட், டிச 25-  இளம் திறமைசாலிகளை ஊக்குவிக்கும் நோக்கில்  2023 எம்.பி.கே.எல்.-எஸ்.ஒய்.ஏ. பொது  பாய்மரப் படகு வெற்றியாளர் கிண்ணப் போட்டியை ஏற்பாடு செய்த கோல லங்காட் நகராண்மைக் கழகம் மற்றும் சிலாங்கூர் பாய்மரப் படகு விளையாட்டு சங்கத்தின் முயற்சிகளை பாய்மரப் படகு விளையாட்டு வீரர்கள் பெரிதும் வரவேற்றனர்.

புதிய அனுபவங்களை பெறுவதற்கும்  வேறு இடத்தில்  திறமைகளை மேம்படுத்துவதற்கும் இந்தப் போட்டி தமக்கு வாய்ப்பை வழங்கியது என இந்தியாவைச் சேர்ந்தபோட்டியாளர்    ஸ்ரேயா கிருஷ்ணா லட்சுமி நாராயணன் ( வயது 17) கூறினார்.

இந்தப் போட்டியில் பங்கேற்க சென்னையில் இருந்து எனது பெற்றோருடன் வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் 2019 ஆம் ஆண்டு முதல் இந்த விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வரும் எனக்கு  பல்வேறு வானிலை  சூழல்களுக்கேற்ப  தயார்படுத்திக் கொள்வதற்குரிய  வாய்ப்பினை இந்த  படகோட்டப் போட்டி  கொடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தப் போட்டியில் மகளிர் ஆப்டிமிஸ்ட்  பிரிவு (இரண்டாம் இடம்), ஆப்டிமிஸ்ட் பிரிவு ஏ (மூன்றாவது இடம் ) மற்றும் ஒட்டுமொத்தமாக ஐந்தாவது இடம் என  மூன்று பிரிவுகளிலும் பரிசினை வென்றதை  சாதனையாகக் கருதுகிறேன். அடுத்த ஆண்டு மீண்டும் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டால்  கண்டிப்பாக நான் பங்கேற்பேன் என்றார் அவர்.

நேற்று இங்கு கோலா லங்காட், பத்து லாவுட் கடற்கரையில் நடைபெற்ற  கோல லங்காட் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.எல்.) – எஸ்.ஒய்.ஏ. பொது வெற்றியாளர் படகுப் போட்டியில் கலந்து கொண்ட  வெளிநாட்டு விளையாட்டு வீரர்களில்  இவரும் ஒருவராவார்.

இதற்கிடையில், கடந்த  டிசம்பர் 22 முதல் 24 வரை கோல லங்காட், பத்து லாவுட் கடற்கரையில் நடந்த இந்த போட்டியில் மொத்தம் 80 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் பங்கேற்றதாக நகராண்மைக் கழகத்  தலைவர் கூறினார்.

இந்தோனேசியா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த மூன்று அணிகளும் இந்தப் போட்டியில் பங்கேற்க ஏற்பாட்டாளர்களால் அழைக்கப்பட்டனர் என டத்தோ அமிருள் அஸிசான் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.


Pengarang :