ECONOMYMEDIA STATEMENTPBT

தாமான் வாவாசான் நிலச்சரிவு- இரும்புத் தடுப்புகளை அமைக்கும் முதல் கட்டப் பணி 80% பூர்த்தி

ஷா ஆலம், டிச 26- பூச்சோங் தாமான் வாவாசானில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இரும்புக் தூண்களைக் கொண்டு தடுப்புகளை அமைக்கும் முதல் கட்டப் பணி இதுவரை 80 விழுக்காடு பூர்த்தியாகியுள்ளது.

வீடுகளின் எதிர்புறம் மற்றும் கால்வாய் பகுதிகளை இலக்காகக் கொண்டு இதுவரை 375 இரும்புத் தூண்கள் அங்கு பதிக்கப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் டத்தோ முகமது பவுஸி முகமது யாத்திம் கூறினார்.

முதல் கட்டப் பணி முற்றுப் பெற்றவுடன் கால்வாயின் இடது மற்றும் வலது புறம் நெடுகிலும் 400 தூண்களைப் பதிக்கும் பணி தொடங்கப்படும் அவர் சொன்னார்.

முதல் கட்டப் பணிகள் யாவும் அந்த குடியிருப்பு பகுதியிலுள்ள பூமியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ள கால்வாயில் தற்காலிக அடிப்படையில் நீரோட்டத்தை சீர் செய்வதை இரண்டாம் கட்டப் பணிகள் இலக்காக கொண்டுள்ளன என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் மண்னை வலுப்படுத்துவது மற்றும் புதிதாக நிலச்சரிவு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த இரும்புத் தூண்களை அமைக்கும் பணி திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக அவர் முன்னதாக கூறியிருந்தார்.

கடந்த வாரம் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவைத்  தொடர்ந்து அந்த குடியிருப்பு பகுதியிலுள்ள ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.


Pengarang :