ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெ.18 கோடி நிதியை வழங்கிய பிரதமருக்கு  கிளந்தான் அரசு நன்றி

கோத்தா பாரு, டிச 31 – தங்கள் மாநிலத்திற்கு  17 கோடியே 79 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியை  கருணைத் தொகையாக வழங்கியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கிளந்தான் மாநில அரசு நன்றி தெரிவித்துள்ளது.

இவ்வாண்டிற்கான மொத்த  கருணைத் தொகை  21 கோடியே 79 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியாகும் என்று மந்திரி புசார் டத்தோ முகமது நசுருதீன் டாவுட் கூறினார்.

கடந்த  வியாழக்கிழமை மாநிலத்திற்கு வருகை தந்து பாசீர் மாஸில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களைச் சந்தித்தபோது பிரதமர்  வெளியிட்ட  இந்த  அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் அவர் சொன்னார்.

ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள  கோலோக்  ஒருங்கிணைந்த நதிப் படுகை மேம்பாட்டுத் திட்டத்தில்  தற்காலிகத் தடுப்பணைகளை  அமைப்பதற்கான 60  லட்சம் வெள்ளி ஒதுக்கீடும் இதில் அடங்கும்.

91 கோடியே 5 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி  மதிப்பில் கிளந்தானில் மேற்கொள்ளப்பட இருக்கும்  ஐந்து வெள்ளத் தணிப்பு திட்டங்களுக்கான கையகப்படுத்தல் நடவடிக்கை  2024ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று நஸ்ருதீன்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவுபடுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாநில அரசு உறுதிபூண்டு உள்ளதாகவும் அவர் சொன்னார்.

இந்த அறிவிப்பு மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் அதேவேளையில்  முதிர்ச்சியான  மற்றும் வளமான அரசியல் கலாச்சாரத்துடன் இணைந்த வலுவான கூட்டரசு-மாநில உறவை வளர்க்கும் என்று மாநில அரசு நம்புகிறது என்று நஸ்ருதீன் கூறினார்.


Pengarang :