ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நான்கு மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,690 பேராக குறைந்தது

கோலாலம்பூர்,  டிச 31- இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை   9,690 பேராகக் குறைந்துள்ளது. இவர்கள் அனைவரும் மொத்தம் 37 துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

நேற்றிரவு   வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,000 பேராக இருந்ததாக  தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின்  (நாட்மா) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிடப்பட்ட நாடு முழுமைக்குமான பேரிடர் சம்பவங்களின் சமீபத்திய அறிக்கை கூறியது.

வெள்ளத்தால்  அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கிளந்தான் தொடர்ந்து விளங்குகிறது.  இது நான்கு மாவட்டங்களில் உள்ள  27 நிவாரண மையங்களில்  9,387 பேர் தங்கியுள்ளனர். நேற்றிரவு 9,667 பேர்  அங்கு தங்கியிருந்தனர்.

பாசீர் மாஸ் மாவட்டத்தில் 6,347 பேரும்  தும்பாட்டில் 2,545 பேரும் கோல கிராயில் 67 பேரும்  ஜெலியில்  428 பேரும் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

திரங்கானுவில், வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக குறைந்துள்ளது. இவர்கள் மூன்று வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம் பெற்றுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை  148 பேராக இருந்தது.  ​​டுங்குன் மற்றும் கோல திரங்கானு ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும்.

இன்று காலை ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை.  சிகாமாட் மாவட்டத்தில் இரண்டு துயர் துடைப்பு மையங்களில் 54 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.

பகாங்கில், பெரா, மாரான் மற்றும் தெமர்லோ மாவட்டங்களில் உள்ள உட்பட ஐந்து நிவாரண மையங்களில்  131 பேர் தங்கியுள்ளனர். அதே சமயம் கேமரன் மலையில் நிலச்சரிவுகள் பாதிக்கப்பட்ட 87 பேர் மாவட்டத்தில் அங்கு திறக்கப்பட்டுள்ள ஒரு துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :