ANTARABANGSA

ஜப்பான் பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 48ஆக உயர்வு

வஜிமா, ஜன 3 – புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை  48ஆக  உயர்ந்துள்ளது.   இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில்  அதிகமானோர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படும்  தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குக் கடும் உறைபனியைக் கடந்து செல்வதில் மீட்பு பணியாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

நிலநடுக்கம்  மையம் கொண்டிருந்த இடமாக 5,000க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட கடற்கரை நகரமான சுசூ விளங்குகிறது. இங்கு 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட   வீடுகள் அழிந்திருக்கலாம் என அதன் மேயர் மசுஹிரோ இசுமியா தெரிவித்தார்.

நேற்று முன்தினம்  மதியம் ரிக்டர் அளவில் 7.6 எனப் பதிவான  நிலநடுக்கம் ஜப்பானில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் கார்கள் மற்றும் வீடுகள் நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. இதனால்  மேற்கு கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் உயரமான பகுதிகளுக்குத் தப்பிச் சென்றனர்.

நிலநடுக்கம் தாக்கியதிலிருந்து இதுவரை  சுமார் 200 நில அதிர்வுகள் கண்டறியப்பட்டுள்ளன.எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவான நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே,  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு உதவிப் பொருள்களை  வழங்குவதற்காக  டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு புறப்பட்ட கடலோர காவல்படை விமானம் ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்துடன் மோதியதில் 5 கடலோர காவல்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில்  ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 379 பேர் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்.


Pengarang :