ANTARABANGSA

தோக்கியோ விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல் – ஐவர் பலி

தோக்கியோ, ஜன 3 – தோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானமும் ஜப்பானிய கடலோர காவல்படை விமானமும் மோதிக் கொண்டதில்  ஜப்பான் கடலோர காவல்படை வீரர்கள் ஐவர் உயிரிழந்ததாக  உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி  ஷின்ஹூவா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய ஜப்பானில்  நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு அந்த  கடலோரக் காவல்படை விமானம் நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாக  ஜப்பான் கடலோர காவல்படையை மேற்கோள்காட்டி தொலைக்காட்சி  நிறுவனமான என்.எச்.கே. தெரிவித்தது.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட  ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

ஹொக்கைடோ மாநிலத்தில்  உள்ள நியூ சிட்டோஸ் விமான நிலையத்திலிருந்து தோக்கியோ வந்த அந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம்,  ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் ஜப்பான் கடலோரக் காவல்படையின் விமானத்துடன் மோதியதாகக் கூறப்படுகிறது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில்  சென்றபோது அதன் ஒரு பக்கத்திலிருந்து ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டு  விமானத்தை தீ ஜூவாலைகள் சூழ்ந்ததைச்  சித்தரிக்கும் காட்சிகளைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

இந்த விமான மோதலைத் தொடர்ந்து  ஹனேடா விமான நிலையத்தின் அனைத்து ஓடுபாதைகளும் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.


Pengarang :