ECONOMYMEDIA STATEMENTSELANGOR

போலி இருமல் மருந்து தயாரிப்பு கூடம் மீது அதிரடிச் சோதனை- பெண்மணி கைது

புத்ராஜெயா, டிச 6- நெகிரி செம்பிலான், மந்தினில் செயல்பட்டு வந்த போலி இருமல் மருந்து தயாரிப்பு கூடத்திற்கு எதிராக உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.

கடந்த டிசம்பர் 15ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இச் சோதனையின் போது அந்த போலி இருமல் மருந்து தயாரிப்பு கூடத்தின் நடத்துநர் என நம்பப்படும் 38 வயது பெண்ணை தாங்கள் கைது செய்ததாக அமைச்சின் அமலாக்கத் துறை தலைமை இயக்குநர் டத்தோ  அஸ்மான் ஆடாம் கூறினார்.

இந்த ஒருங்கிணைந்த சோதனையில் முழுமையாக தயாரிக்கப்பட்டு பொட்டலமிடப்பட்ட 10,000 போத்தல் இருமல் மருந்து, இருமல் மருந்து என நம்பப்படும் 900 லிட்டர் திரவம், கலவை இயந்திரம், வாகனங்கள் மற்றும் இருமல் மருந்து தயாரிப்பதற்கு பயன்படும் இதர உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த சோதனையில் இருமல் மருந்து வர்த்தகம் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 236,516 வெள்ளியாகும் என அவர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சொன்னார்.

உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் புத்ராஜெயா அதிகாரிகளோடு சுகாதார அமைச்சு, உள்நாட்டு வருமான வரி வாரியம், தேசிய நிதிக் குற்றத் தடுப்பு மையம் ஆகியவற்றின் அமலாக்கத் தரப்பினரும் இந்த சோதனை நடவடிக்கையில் பங்கு கொண்டனர் என்றார் அவர்.

சுகாதார  அமைச்சு கடந்த மூன்று மாத காலமாக மேற்கொண்டு வந்த கண்காணிப்பு நடவடிக்கையின் பலனாக அந்த இருமல் மருந்து தயாரிப்புக் கூடத்திற்கு எதிரான இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :