ECONOMYMEDIA STATEMENTNATIONAL

புருவாஸ் எம்.பி. வீட்டில் தீச்சம்பவம் தொடர்பான அறிக்கை இவ்வாரம் தயாராகும்- தீயணைப்புத் துறை

ஈப்போ, ஜன 16- புருவாஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ங்கே கூ ஹாம் வீட்டின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான அறிக்கை இவ்வாரம் தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட பெட்ரோல் குண்டு போன்ற முதன்மையான ஆதாரங்கள் மீதான ஆய்வின் உள்ளடக்கத்தை அந்த அறிக்கை கொண்டுள்ளதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் சயானி சைடோன் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் தீயணைப்புத் துறை விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளது. கோலாலம்பூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட இரு ஆதாரப் பொருள்களில் அடங்கியுள்ள அம்சங்களை கண்டறிவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று அவர் சொன்னார்.

எங்களின் சீரான செயலாக்க நடைமுறைகளின் படி அந்த ஆய்வின் முடிவுகளைப் பெறுவதற்கு 10 நாட்கள் வரை தேவைப்படும். ஆகவே, இந்த அறிக்கை முழுமை பெறுவதற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்கள் தேவைப்படும் என்றார் அவர்.

இங்குள்ள மேரு ராயாவிலுள்ள மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான இயக்குநரின் முக்கிய உரை நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவ்வீட்டில் தீச்சம்பவம் ஏற்படுவதற்கு சதிச்செயல் தொடர்பான அம்சங்கள் காரணமாக அமைந்ததா என்பதை கண்டறிவதை இந்த விசாரணை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் சொன்னார்.

ஆயர் தாவாரில் உள்ள டத்தோ ங்கே வீட்டின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சில் வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்காக ஆடவர் ஒருவரை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை ஷா ஆலமில் கைது செய்தனர்.


Pengarang :