ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பத்துமலை மின்படிக்கட்டுத் திட்டத்தால் நடப்பிலுள்ள படிக்கட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படாது- நடராஜா விளக்கம்

கோலாலம்பூர், ஜன 26- பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர்  ஆலயத்தில் மின் படிக்கட்டுகளை அமைக்கும் திட்டம் குன்றின் மீதுள்ள திருமுருகன் சன்னிதானம் நோக்கிச் செல்லும் 272 படிக்கட்டுகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெளிவுபடுத்தியுள்ளார்.

மாறாக, இயற்கை அழகைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த படிக்கட்டுகள் குகைக் கோயில் நோக்கிச் செல்லும் சுண்ணாம்புக் கல் மலையின் இடது புறத்தில் அமைக்கப்படும் என்ற அவர் சொன்னார்.

இந்த திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்றால் அந்த மின்படிக்கட்டுகளை நாம் தற்போதுள்ள படிக்கட்டுகள் மீதே அமைத்து விடலாம். தற்போது அங்கு நான்கு படிக்கட்டுகள் உள்ளன. மின்படிக்கட்டுகளை அமைப்பதற்கு இடது மற்றும் வலது படிக்கட்டுகளை நாம் பயன்படுத்த முடியும்.

ஆயினும், இத்திட்டத்தால் பத்துமலையின் இயற்கை அழகு கெட்டுவிடும். மேலும், மிகவும் விகாரமான தோற்றத்தையும் தரும் என பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

முதியவர்கள் மற்றும் சிறார்கள் குகைக்கோயிலுக்குச் செல்வதை எளிதாக்கும் நோக்கில் இந்த மின்படிக்கட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர்  கூறினார்.

நாட்டின் பிரசித்திப் பெற்ற சுற்றுலா மையங்களில் ஒன்றாக விளங்கும் பத்துமலையில் மின்படிக்கட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் கடந்த ஜனவரி 19ஆம் தேதி கூறியிருந்தது.

பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் குகைக் கோயிலுக்குச் செல்வதை எளிதாக்கும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அது தெரிவித்திருந்தது.

பத்துமலையில் இவ்வாண்டு அமல்படுத்தப்படவுள்ள இரு மேம்பாட்டுத் திட்டங்களில் இந்த மின்படிக்கட்டுத் திட்டமும் ஒன்றாகும் எனக் கூறிய நடராஜா, 3 கோடியே 50 லட்சம் வெள்ளி செலவில் பல்நோக்கு மண்டபம் ஒன்றும் இங்கு நிர்மாணிக்கப்படும என்றார்.

இதனியே, இந்த மேம்பாட்டுத் திட்ட அமலாக்கத்தில் மாநில அரசின் கடப்பாட்டை உறுதிப்படுத்திய சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூர் மாநிலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகுந்த பகுதிகளுக்கான மேம்பாட்டு மீதான நுட்பக் குழுவின் ஒப்புதலுக்காக தாங்கள் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.


Pengarang :