ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டுசுன் துவா தொகுதியில் 400 பேருக்கு பெருநாள் ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

ஷா ஆலம், ஜன 26- டுசுன் துவா தொகுதியில் சீனப் புத்தாண்டைக்  கொண்டாடும் வசதி குறைந்த 400 குடும்பங்களுக்கு 200 வெள்ளி மதிப்புள்ள ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.

பெருநாளுக்கான முன்னேற்பாடுகளைக் கவனிப்பதில் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு  இந்த நிதியுதவி பெரிதும் துணை புரியும் என்று தாம் நம்புவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ் கூறினார்.

இந்த பற்றுச்சீட்டுகளை விநியோகிக்கும் பணி அடுத்த வாரம் நடைபெறும். தகுதி உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதை உறுதி செய்வதற்காக உண்மையாகவே உதவித் தேவைப்படுவோரை அடையாளம் காணும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த உதவி சம்பந்தப்பட்ட குடும்பங்களின் சீனப்புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மேலும் மெருகூட்டும் என எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு எப்போதும் உதவும் கடப்பாட்டை மாநில அரசு கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இதனிடையே, தாபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர் (தாவாஸ்) திட்டத்தில்  பதிந்து கொண்டுள்ள இத்தொகுதியைச் சேர்ந்த சுமார் 400 முதலாம் ஆண்டு மாணவர்கள் விரைவில் பள்ளி உதவிப் பொருள்களைப் பெறுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புத்தகப் பை, எழுது பொருள்கள் மற்றும் உணவுப் கலங்கள் உள்ளிட்ட பொருள்கள் அவர்களுக்கு வழங்கப்படும். இந்த உதவிப் பொருள்கள் பெற்றோர்களின்  நிதிச்சுமையைக் குறைக்க உதவும் அதேவேளையில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என அவர் கூறினார்.


Pengarang :