ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டில் நாளை இலவச மருத்துவ முகாம்

ஷா ஆலம், ஜன 26- குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கான பெடுலி கெசிஹாத்தான் திட்டத்தின் (பெக்கா 40) கீழ் நாளை சனிக்கிழமை இங்குள்ள செக்சன் 11, ஜென்ஜாரோம் மண்டபத்தில் நடைபெறவுள்ள இலவச மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும்படி 40 வயதுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு கோத்தா அங்கிரிக் தொகுதி சேவை மையம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த மருத்துவ விழாவில் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் மருத்துவப் பரிசோதனை இயக்கம் மற்றும் இலவச கண் பரிசோதனை ஆகியவையும் மேற்கொள்ளப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிம் கூறினார்.

இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மார்பகப் புற்றுநோய், கண்பார்வை குறைபாடு உள்ளிட்ட நோய்கள் தொடர்பான சோதனைகள் இந்நிகழ்வில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

இது தவிர, இந்த நிகழ்வில் மூக்கு கண்ணாடிகள் கழிவு விலையிலும் வழங்கப்படும். தகுதி உள்ள தரப்பினருக்கு இந்த சோதனை இலவசமாக வழங்கப்படும் என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

மேலும், இந்த நிகழ்வில் மேமோகிராம் மற்றும் எச்.பி.வி. டி.என்.ஏ. சோதனைக்கான கூப்பன்களும் எஸ்.எம்.யு.இ. எனப்படும் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்திற்கான பற்றுச் சீட்டுகளும் வழங்கப்படும் என அவர் சொன்னார்.

பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் நடத்தப்படும் இந்த நிகழ்வு காலை 10.00 மணி தொடங்கி மாலை 4.00 மணி வரை நீடிக்கும் என்றார் அவர்.


Pengarang :