ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

நான்கு மாநிலங்களில்  வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,323ஆக உயர்வு

கோலாலம்பூர், ஜன 26- நான்கு மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு கண்டு வருகிறது. இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி 1,016 குடும்பங்களைச் சேர்ந்த 3,323 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 958 குடும்பங்களைச் சேர்ந்த 3,128 பேராக இருந்தது.

திரங்கானு மாநிலத்தில் வெள்ளம் காரணமாக நேற்றிரவு 458 குடும்பங்களைச் சேர்ந்த 1,635 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்த நிலையில் இன்று அதிகாலை அந்த எண்ணிக்கை 498 குடும்பங்களைச் சேர்ந்த 1,760 பேராக உயர்ந்துள்ளதாக நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் தேசிய பேரிடர் கட்டுபாட்டு மையம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

இம்மாநிலத்தில் 31 துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ள வேளையில் அவற்றில் 15 மையங்கள் பெசுட் மாவட்டத்திலும் ஐந்து மையங்கள் டுங்குனிலும் ஐந்து மையங்கள் உலு திரங்கானுவிலும் ஆறு மையங்கள் செத்தியுவிலும் செயல்படுகின்றன.

இதனிடையே, கிளந்தான் மாநிலத்தில் திறக்கப்பட்டுள் 15 துயர் துடைப்பு மையங்களில் 257 குடும்பங்களைச் சேர்ந்த 836 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பகாங் மாநிலத்தின் வெள்ள நிலைமையில் மாற்றமில்லை. குவாந்தான் மாவட்டத்திலுள்ள ஒரு நிவாரண மையத்தில் 257 குடும்பங்களைச் சேர்ந்த 836 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.

திரங்கானு, பகாங், ஜொகூர், கெடா, சிலாங்கூர், பெர்லிஸ் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் உள்ள பல ஆறுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதை வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையின் டெலிமெட்ரி மையத்தின் அளவீடு காட்டுகிறது.

வெள்ளம், மண் சரிவு மற்றும் பாலம் உடைந்தது போன்ற காரணங்களால நாடு முழுவதும் உள்ள 18 சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.


Pengarang :