ANTARABANGSA

ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டு ஒரு மாதம் பூர்த்தி- 14,000 பேர் தொடர்ந்து தற்காலிக மையங்களில் தஞ்சம்

கன்ஸாவா, பிப் 2- மத்திய ஜப்பானின் நோத்தோ தீபகற்பத்தை
கடுமையான பூகம்பம் தாக்கி ஒரு மாதம் ஆன போதிலும் 14,000க்கும்
மேற்பட்டோர் இன்னும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையில்
உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில்
அங்குள்ளவர்களுக்குத் தற்காலிகக் குடியிருப்புகளை அமைக்கும் பணியில்
ஊராட்சி மன்றங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த பூகம்பத்தில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள்
நெருக்கடியிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதில் பெரும்
சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். மளிகைக் கடைகள் மற்றும்
பல்பொருள் விற்பனை மையங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால்
உணவுச் சங்கலித் தொடர் பாதிக்கப்பட்டு சுத்தமான உணவைப் பெறுவதில்
அவர்கள் தடைகளை எதிர்நோக்கியுள்ளனர் என்று கியூடோ செய்தி
நிறுவனம் கூறியது.

புத்தாண்டு தினத்தில் ஜப்பானின் கடலோர பகுதியான இஷிகாவாவில்
ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் காரணமாகப் பேரிழிவும் தீ விபத்துகளும்
ஏற்பட்டன.

இந்த பேரிடர் நிகழ்ந்து ஒரு மாதம் ஆன போதிலும் சாலைகள் உள்பட
எந்த நிலையிலும் மாற்றம் ஏற்படவில்லை என்று இப்பேரிடரில் வீட்டினை
இழந்து சமூக மையத்தில் அடைக்கலம் நாடியிருக்கும் ஃபூமியோ இஷிபி
கூறினார்.

மன உளைச்சல் காரணமாகவும் மெல்லிய மெத்தையில் உறங்க
வேண்டிய நிர்பந்தம் காரணமாகவும் தம்மால் நிம்மதியாக உறங்க
இயலவில்லை என்று 75 வயதான அவர் சொன்னார்.

பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 10,000 பேர் சமூக மண்டபங்கள் உள்ளிட்ட
இடங்களில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர். மேலும் எட்டாயிரம் பேர்
அருகிலுள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும்
தற்காலிக வீடுகளில் அடைக்கலம் நாடியுள்ளனர்.


Pengarang :