ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சாலையில் பட்டாசு வெடித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர்- 12 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர், பிப் 3- சாலையில் பட்டாசு வெடித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெட்டாலிங் ஜெயா, கம்போங் காயு ஆராவில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக  ஊடகங்களில் நேற்று முன்தினம் பரவலாகப் பகிரப்பட்டது.

இருபத்திரண்டு முதல் 68 வயது வரையிலான அந்த 12 பேரும் கம்போங் காயு ஆராவில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபாக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.

அந்த சம்பவத்தை சித்தரிக்கும் 22 விநாடி காணொளி போலீசாரின் கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

குண்டர் கும்பல் சார்புடைய சின்னம் பதிக்கப்பட்ட வெள்ளை நிற டோயோட்ட வெல்ஃபையர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்துச் செல்லும் காட்சிகளும் அந்த காணொளியில் பதிவாகியுள்ள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மீடியா ஹூத்தான் எனும் பேஸ்புக் கணக்கின் உரிமையாளர் நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணியளவில் அந்த காணொளியைப் பதிவேற்றம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அச்சம்பவம் பெட்டாலிங் ஜெயா, கம்போங் காயு ஆரா பகுதியில் அன்றைய தினம் நிகழ்ந்துள்ளது. எனினும் சம்பவம் நிகழ்ந்த நேரம் உறுதியாகத் தெரியவில்லை என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் டோயோட்டா வெல்ஃபையர் வாகனம் ஒன்று பறிமுதல்  செய்யப்பட்டதாகக் கூறிய அவர், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக 1957ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் 7(ஏ) பிரிவு மற்றும் 1966ஆம் ஆண்டு பொது அமைப்புச் சட்டத்தின் 43வது பிரிவின் ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :