ANTARABANGSAMEDIA STATEMENT

இஸ்ரேலுக்கு எதிராக அல்ஜீரிய வழக்கறிஞர் குழு அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்தான்புல், பிப் 3- பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றத்தில் ஈடுபட்ட இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எதிராக அல்ஜீரியாவிலுள்ள வழக்கறிஞர்கள் குழு ஒன்று தி ஹேக்கில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.)  வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு மனுவில்  துனிசியா, ஜோர்டான், மொரிட்டானியா மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் வழக்கறிஞர்கள் சங்கங்களும் கையெழுத்திட்டுள்ளதாக அல்ஜீரிய தேசிய வழக்கறிஞர் சங்கங்களின் ஒன்றியம்  அறிவித்ததாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நீதிமன்ற கோரிக்கை மனு  காஸா தீபகற்பத்தில் இஸ்ரேல் புரிந்த  குற்றங்களை சித்தரிக்கும்   புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நம்பத்தகுந்த  வட்டாரங்களிலிருந்து   சேகரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு (ஐ.நா.) மற்றும்  சர்வதேச குழுக்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் ஆகியவற்றோடு  காஸாவில் நடந்த இனப்படுகொலை தொடர்பான குற்றவியல் ஆதாரங்களை உறுதிப்படுத்தும் அனைத்துலக நீதிமன்றத்தின் (ஐ.சி. ஜே.) சமீபத்திய உத்தரவு ஆகியவற்றை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ ஆவணங்களும் இதில் அடங்கும்.

இஸ்ரேல் இனப்படுகொலை செய்தது என்ற தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டு நியாயமானது என ஐ.சி.ஜே. கடந்த ஜனவரி 26ஆம் தேதி தீர்ப்பளித்தது.

காஸாவுக்கான உதவிகளை தடுப்பதை நிறுத்தவும், மனிதாபிமான நிலைமையை மேம்படுத்தவும் இஸ்ரேலை வலியுறுத்தி நீதிமன்றம் தற்காலிக உத்தரவை பிறப்பித்தது.

கடந்தாண்டு அக்டோபர் 7 முதல் காஸா தீபகற்பம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் குறைந்தது 27,131 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 66,287 பேர் காயமடைந்தனர்.


Pengarang :