ECONOMYMEDIA STATEMENT

ஆடவரை மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்- ஐந்து போலீஸ்காரர்கள் கைது

புக்கிட் மெர்தாஜம், பிப் 3- இங்குள்ள பெர்மாத்தாங் திங்கியில் தொழிற்சாலை ஊழியர் ஒருவரை மிரட்டி பணம் பறித்ததாக செய்யப்பட்ட புகார் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக போலீஸ் துறையின் ரோந்துப் பிரிவைச் சேர்ந்த ஐந்து போலீஸ்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய ஆடவர் ஒருவரிடமிருந்து கிடைத்த புகாரின் அடிப்படையில் 24 முதல் 48 வயது வரையிலான அந்த ஐந்து போலீஸ்காரர்களும் புக்கிட் மெர்தாஜாமில் நேற்றிரவு 11.15 மணி அளவில் கைது செய்யப்பட்டதாக பினாங்கு  மாநில போலீஸ் தலைவர் டத்தோ காவ் கோக் சின் கூறினார்.

இந்த புகார் தொடர்பில் போலீசார் விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணை மேற்கொள்வர் எனக் கூறிய  அவர், குற்றச்செயல் அல்லது ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் அல்லது உறுப்பினர்கள் விஷயத்தில் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப் படாது என்றார்.

கடந்த வியாழக்கிழமை இரவு 10.15 மணி அளவில் தாம் காரில் சென்று கொண்டிருந்த போது போலீஸ் ரோந்து கார் ஒன்று தம்மை மறித்ததாக அந்த ஆடவர் தனது போலீஸ் புகாரில் கூறியிருந்தார்.

மூன்று போலீஸ்காரர்கள் எனது காரை சோதனையிட்ட தாகவும் அவர்களில் ஒருவர் போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பொட்டலம் ஒன்றை காரிலிருந்து எடுத்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த பொருள் தன்னுடையது அல்லது என்று காரோட்டி கூறியுள்ளார். எனினும், இது அவருடையது என வாதிட்ட போலீஸ்காரர்கள் இந்த குற்றத்திற்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என மிரட்டியுள்ளனர்.

சிறிது நேரத்தில்  மற்றொரு ரோந்துக காரில் மேலும் இரு போலீஸ்காரர்கள் அங்கு வந்துள்ளனர். இந்த குற்றத்திற்காக கைது செய்யப்படாமல் இருக்க வேண்டுமானால் 10,000 வெள்ளி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அந்த போலீஸ்கார ர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்த அந்த காரோட்டி அருகிலுள்ள வங்கியிலிருந்து 4,500 வெள்ளியை மீட்டு வந்து கொடுத்தப் பின்னர் அவரை விடுவித்துள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் செய்தார்.


Pengarang :