ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பி.பி.ஆர். வீட்டுடைமைத் திட்ட மோசடி- எம்.ஏ.சி.சி. நடவடிக்கையில் பெண்மணி கைது 

சண்டகான், பிப் 3- மக்கள் வீடமைப்புத் திட்ட (பி.பி.ஆர்.) குடியிருப்புகளை வழங்குவது தொடர்பில் பொதுமக்களை வசப்படுத்தியது மற்றும் கையூட்டு பெற்ற விவகாரத்தில் முக்கியப் புள்ளியாக விளங்கும் பெண்மணி ஒருவரை மலேசியா ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.

விசாரணைக்கு உதவுவதற்காக . சண்டகானில் உள்ள  எம்.ஏ.சி.சி. அலுவலகத்திற்கு நேற்றிரவு 10.35 மணியளவில் வந்த போது 40 வயது மதிக்கத்தக்க அப்பெண் கைது செய்யப்பட்டதாக வட்டாரம் ஒன்று கூறியது.

இந்த ஊழல் புகார் தொடர்பில் அப்பெண்ணின் 40 வயது மதிக்கத்தக்க கணவரும் 20 வயது மதிக்கத்தக்க மகனும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இப்பெண்ணும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பி.பி.ஆர். வீடுகளைக் பெற்றுத் தருவதாக பொது மக்களிடம் ஆசை வார்த்தை காட்டி ஒவ்வொருவரிடமும் 10,000 வெள்ளி வரை அக்கும்பல் வசூலித்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்த மோசடியில் பல லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, பெர்னாமா தொடர்பு கொண்ட போது இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய சபா மாநில எம்.ஏ.சி.சி. இயக்குநர் டத்தோ எஸ்.கருணாநிதி, 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 16(ஏ)(எ) பிரிவின் கீழ் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சொன்னார்.


Pengarang :