செய்தி ;சு.சுப்பையா
சுபாங்.பிப்.2- சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் மூத்த தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக திகழ்கிறது ஆர்.ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியின் 2023 ஆம் ஆண்டுக்கான நேர்த்தி நிறை விழா சிறப்பாக நடந்தேறியது. இவ்விழா வெற்றியடைய சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரும் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சருமான டத்தோ ரமணன் ரி.ம. 5,000.00 கொடுத்து சிறப்பித்தார்.
கோவிட் 19 பெருந்தொற்று க்கு பிறகு இவ்வாண்டு மீண்டும் பள்ளியின் நேர்த்தி நிறை விழா சிறப்பாக நடைபெறுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக நேர்த்தி நிறை விழா நடத்த முடியவில்லை என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
இப்பள்ளியில் 417 மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 2 வகுப்புகள் நடை பெறுகின்றன. ஒன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வகுப்பு வரை மொத்தம் 12 வகுப்புகள் உள்ளன. இந்த 12 வகுப்பு மாணவர்கள் கல்வியில் புறப்பாட நடவடிக்கையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சிறப்பிக்க வேண்டியே ஆண்டுதோறும் நேர்த்தி நிறை விழா நடத்தப் படுகிறது.
நேர்த்தி நிறை விழாவில் டத்தோ ரமணன் , தனது பாட்டியார் தான் ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் மறைவினால் கலந்து கொள்ள முடியவில்லை. அவரது பிரதிநிதியாக அவரது சிறப்பு செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் கலந்து கொண்டு சிறப்பித்தார். தொடர்ந்து சிறப்புரை ஆற்றி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் ஆர்.ஆர்.ஐ. என்ற இரப்பர் ஆய்வு கழகத்தின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் சைரோஸ்சானி, நாடாளு மன்ற அலுவலக அதிகாரி தமிழ் செல்வன், தொகுதி பி.கே.ஆர் கட்சித் தலைவர்கள் லோகா ,தேவி. நாதன், ஆலயத் தலைவரும் இப்பள்ளியின் பெற்ற ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆர்.ஆர்.ஐ இரப்பர் தோட்ட தமிழ்ப்பள்ளி மிக நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது. அதே போல் கல்வியிலும் உயர்ந்த சேவையை வழங்கி வருகிறது. 2023 ஆம் மற்றும் 2024 ஆம் ஆண்டில் ஆறாம் ஆண்டு கல்வித் தவணையை முடித்த மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வண்ணமாக சிறப்பு பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது.
ஆறாம் ஆண்டு வகுப்பை நிறைவு செய்த அனைத்து மாணவர்களும் தலைமை ஆசிரியர் புஸ்பராணி, துணை தலைமை ஆசிரியர்கள் விஸ்வநாதன், உமாதேவி, வீரம்மா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து சிறப்பாக நேர்த்தி நிறை விழா நடத்தி முடித்தனர்.
இவ்விழா சிறப்பாக வெற்றியடைய பெற்றோர் ஆசிரியர் சங்கம் உறுதுணையாக இருந்து செயல் பட்டது. கலந்துக் கொண்ட பிரமுகர்கள் , தலைமை ஆசிரியர், துணைத் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் மாணவர்களும் பரிசு கேடயம் மற்றும் நற்சான்றிதழ் எடுத்து வழங்கி சிறப்பித்தனர்