MEDIA STATEMENTNATIONAL

சாலைத் தடுப்பில் போலீஸ்காரருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி- பாகிஸ்தானியர் கைது

கோத்தா பாரு, மார்ச் 2- இன்று அதிகாலை தும்பாட்டில் நடத்தப்பட்ட  சாலைத் தடுப்பு சோதனையின் போது  காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சந்தேகத்தின் பாகிஸ்தானியர் ஒருவரை  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்.) கைது செய்தது.

முப்பது  வயதுடைய அந்நபர் இன்று அதிகாலை 1.20 மணியளவில் வேனை ஓட்டிக் கொண்டிருந்தபோது தடுத்து வைக்கப்பட்டதாகவும் அவருடன் சக நாட்டுப் பிரஜை ஒருவரும் இருந்ததாகவும் வட்டாரம் ஒன்று கூறியது.

சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதிலிருந்து தவிர்ப்பதற்காக   பணியில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு கையூட்டாக 200  வெள்ளியைக் கொடுக்க சம்பந்தப்பட்ட அந்பர்  முயன்றார்.

அந்த நபரிடம் வர்த்தக வாகன உரிமம் (ஜி.டி.எல்.) இல்லை என்பதும் பயண அனுமதியை தவறாகப் பயன்படுத்தியதும் விசாரணையில்  தெரியவந்தது என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

இதற்கிடையில், கிளந்தான் மாநில் எஸ்.பி.ஆர்.எம். இயக்குனர் ரோஸ்லி ஹுசைனை தொடர்பு கொண்டபோது, ​​சம்பந்தப்பட்ட நபர்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதை  உறுதிப்படுத்தினார்.

2009 ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம். சட்டத்தின் பிரிவு 17 (b) இன் கீழ் மேல் விசாரணைக்காக அந்த நபரை ஆறு நாட்கள் காவலில் வைக்க கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது என்றார் அவர்.


Pengarang :